வெள்ளியங்கிரி மலை


வெள்ளியங்கிரி மலை
x
தினத்தந்தி 31 May 2021 6:53 PM GMT (Updated: 31 May 2021 6:53 PM GMT)

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது, வெள்ளியங்கிரி மலை.

இது மேகங்கள் சூழ, வெள்ளியால் வார்க்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதால் ‘வெள்ளியங்கிரி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஏழு மலைத் தொடர்களைக் கொண்டதாகும். இதன் ஏழாவது மலையில்தான், வெள்ளியங்கிரிநாதர், சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். இது சிவபெருமானின் காலடிபட்ட மலை என்றும், இங்கு சில காலம் ஈசன் தன் மனைவி பார்வதியுடன் தங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் இதனை ‘தென்னக கயிலாயம்’ என்றும் அழைப்பார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரிநாதர் கோவில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை ஏழு சிகரங்களை கொண்டிருக்கிறது. சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செல்லும் இதன் பாதையில், வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் இருக்கின்றன.

மலையின் அடிவாரப் பகுதி ‘பூண்டி’ என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர், சவுந்திரநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இவர்களுடன் விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட இன்னும் பிற தெய்வ சிலைகளும் காணப்படுகின்றன. வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது சிகரத்தில் உள்ள ஒரு குகையில் சுயம்பு லிங்க வடிவிலான இறைவனை தரிசனம் செய்யலாம். இதற்காக கடுமையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆதிசங்கரர் வழிபட்ட இடமாகவும் இது போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும், சூட்சுமத்தில் இயங்கியும் வருவதாகவும் சொல்கிறார்கள்.

Next Story