புடவை கட்டி பூஜை செய்யும் அர்ச்சகர்


புடவை கட்டி பூஜை செய்யும் அர்ச்சகர்
x
தினத்தந்தி 16 Jun 2021 7:17 PM GMT (Updated: 16 Jun 2021 7:17 PM GMT)

புகழ்பெற்ற இந்த திருக்கோவில் பஞ்ச பூதத் திருத்தலங்களில், நீருக்குரிய தலமாக போற்றப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ளது, திருவானைக்காவல் திருத்தலம். இது திருச்சியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. புகழ்பெற்ற இந்த திருக்கோவில் பஞ்ச பூதத் திருத்தலங்களில், நீருக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயம் அம்பிகை, ஈசனிடம் உபசேம் பெற்ற இடமாகும். இந்த ஆலயத்தின் சிறப்புகளை சிறுசிறு குறிப்புகளாக பார்க்கலாம்.

* ஜம்பு மாத முனிவர் என்பவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், இது ‘ஜம்புவனம்’, ‘ஜம்புகேஸ்வரம், ‘ஜம்புவீச்வரம்’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இறைவனின் பெயரும் ‘ஜம்புகேஸ்வரர்’ என்றானது. யானை வழிபட்ட காரணத்தால், ‘திருவானைக்காவல்’ என்றும் பெயர் பெற்றது.

* இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவியின் திருநாமம், ‘அகிலாண்டேஸ்வரி’ என்பதாகும். இந்தக் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அம்மனின் சன்னிதியானது, ‘தண்டநாத பீடம்’ என்னும் ‘வராஹி பீடமாக’ விளங்குகிறது. ஆதிசங்கரர் இத்தல அம்மனுக்கு, சிவ சக்கரம், ஸ்ரீசக்கரம் என்னும் இரண்டு தாடங்கங்களை காதில் குண்டலங்களாக பிரதிஷ்டை செய்துள்ளார்.

* சிவபெருமானின் கட்டளைப்படி, அம்பாள் பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாள். கடும் தவத்தின் மூலமாக மீண்டும் கயிலாயம் செல்லும் வகையில் ஈசனை நினைத்து வழிபாடுகள் செய்து வந்தாள், அம்பாள். இதற்காக காவிரி நீரில், லிங்கம் செய்து வழிபட்டாள். அந்த லிங்கத்தில் சிவபெருமான் எழுந்தருளி, அம்பிகைக்கு அருளாசி வழங்கினார். அம்பிகையால் நீரில் உருவாக்கப்பட்ட லிங்கம் உள்ள தலம் என்பதால், இது பஞ்ச பூதத் தலங்களில் ‘நீர்த் தலம்’ ஆனது.

* இத்தலத்தில் தவமிருந்த ஜம்பு முனிவருக்கு, சிவபெருமான் காட்சி கொடுத்ததோடு, நாவல் பழத்தை பிரசாதமாக வழங்கினார். இறைவனின் அருளால் கிடைத்த பழத்தை ஆவலோடு உண்டபோது, அதன் விதையையும் சேர்த்து விழுங்கிவிட்டார். அது வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலே மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ‘ஜம்பு’ என்றும் பெயர் உண்டு. இந்த மரத்தின் கீழ்தான், அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் அமைந்திருந்தது.

* இந்த ஆலயத்தில் உச்சிக்கால பூஜையின்போது அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனை பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே, இத்தல இறைவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னிதிக்குச் செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னிதிக்கு திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

Next Story