ஆன்மிகம்

அம்பிகை அருள் வழங்கும் ஆடிவெள்ளி + "||" + Ambika will provide grace Aaadivelli

அம்பிகை அருள் வழங்கும் ஆடிவெள்ளி

அம்பிகை அருள் வழங்கும் ஆடிவெள்ளி
கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒருமாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது.
ஆடி மாத வெள்ளிக்கிழைகளில் தான் ஆலயங்களில் விளக்கு பூஜை நடத்துவார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்யும் மாதம் ஆடி மாதம்தான். வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும். வேதனைகள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப்படையில் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன்கள் கைமேல் கிடைக்கும்.

பெண் தெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாக ஆடி மாதம் அமைகின்றது. ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் அகலும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் அமைகின்றது.

ஆடி வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமியை வரவேற்க வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமிக்குரிய தாமரைக் கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக் கோலம் ஆகியவற்றில் ஒன்றை வரைய வேண்டும். அதன் கீழே ‘திருமகளே வருக’ என்று கோலமாவில் எழுதி வைக்கலாம். அதிகாலையில் வீதிக் கதவைத் திறக்கும் பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயரையும் உச்சரித்து “வருக.. வருக..” என்று சொல்ல வேண்டும். இல்லத்து பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி நடுநாயகமாக விநாயகர் படம் வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது.

அம்பிகையை ‘சக்தி’ என்று சொல்கின்றோம். எந்தக் காரியத்தை செய்யும் பொழுதும், ‘சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியோர்கள் சொல்வது வழக்கம். ஒரு மனிதன் செயல்பட காரணமாக இருப்பது, அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள் கொடுக்கும் சக்தியான அம்பிகையும் தான். அந்த சக்தியை சாந்த வடிவில் ‘காமாட்சி’ என்றும், ‘மீனாட்சி’ என்றும், ‘விசாலாட்சி’ என்றும், ‘உண்ணாமலை’ என்றும், ‘அகிலாண்டேஸ்வரி’ என்றும், ‘புவனேஸ்வரி’ என்றும், ‘திரிபுரசுந்திரி, காந்திமதி, பெரியநாயகி, தையல்நாயகி’ என்றும் எண்ணற்ற பெயர்களைச் சூட்டி வழிபாடு செய்கின்றோம். ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு, மாரியம்மன், காளியம்மன், பொன்னழகி, கனக துர்க்கை, பராசக்தி, திரிசூலி என்றெல்லாம் பெயர் சூட்டி இருக்கின்றார்கள்.

பால்கேட்டு அழுத பிள்ளைக்கு சீர்காழி படித்துறையில் பால் கொடுத்தவள், நாக்கில் ‘ஓம்’ என்று எழுதி காளமேகத்தை பாட்டரசன் ஆக்கியவள், வேல் கேட்ட முருகப்பெருமானுக்கு சக்திவேல் கொடுத்து சூரனை சம்ஹாரம் செய்ய வைத்தவள். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட அம்பிகையை முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற நாள் ஆடி வெள்ளிக்கிழமை ஆகும். குடும்பப் பிரச்சினை அகலவும், திருமண யோகம் கைகூடவும், அனைத்து நன்மைகளும் அடுக்கடுக்காக வந்து சேரவும், ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் அம்பிகையை வழிபடுவோம். இன்பங்களை வரவழைத்துக் கொள்வோம்.