சொந்தங்களை கொண்டாடுங்கள்


சொந்தங்களை கொண்டாடுங்கள்
x
தினத்தந்தி 13 Sep 2021 11:22 PM GMT (Updated: 13 Sep 2021 11:22 PM GMT)

வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல அமல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாவமன்னிப்பு கிடைத்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இதற்கு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான சொந்தங்களைப் பேணுதல் என்பதை நாம் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.

ஒருமுறை நபிககள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் வந்த போது, ஒரு கிராமவாசி அவரை வழிமறித்து, “இறைத்தூதரே, ஒரு மனிதனை சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும், நரகத்தைவிட்டு தூரமாகவும் ஆக்குவதற்கு உரிய நற்செயல் எது?” என்று கேட்டார்.

அதற்கு நபிகள் (ஸல்) கீழ்க்கண்ட 5 விஷயங்களை தெரிவித்தார்கள்:

1) அல்லாஹ்வை வணங்க வேண்டும், 2) எந்த நிலை யிலும் இறைவனுக்கு இணை வைக்கக்கூடாது, 3) கடமையாக்கப்பட்ட 5 நேரத் தொழுகையை தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும், 4) இறை வனால் விதிக்கப்பட்ட ஜகாத்தை முழுமையாக கொடுக்க வேண்டும், 5) சொந்தங்களை சேர்ந் திருக்க வேண்டும்.

சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேரமுடியாது. நரகத்தின் மேல் போடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் “ஸிராத்துல் முஸ்தகீம்”. சொர்க்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும். இது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன் (19:71) இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், அதனைக் (ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்”. தர்மம் செய்தல், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்தல், மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தல், எப்பொழுதும் அங்கசுத்தியுடன் (ஒளு) இருத்தல் மற்றும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஆகிய 5 விஷயங்களை ஒருவர் நிரந்தரமாக செய்தால் அவருக்கு மலைபோன்ற அளவு நன்மையும், உணவு, உறைவிடத்தில் விசாலமும் கிடைக்கும்.

இதையே திருக்குர் ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவு முறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 13:21).

இறைவனின் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் சொர்க்கத்திலும் இடம் கிடைக்கும். எனவே இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.

Next Story