ஆன்மிகம்

திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி + "||" + Nambiyandar Nambi compiled the verses

திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி

திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி
கடலூர் மாவட்டம் திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதா் என்ற திருக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில்,33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
இங்கு மூலவராக சிவபெருமான் இருந்தாலும், பொள்ளாப் பிள்ளையார் தான் பிரசித்திப் பெற்ற தெய்வமாக இருக்கிறார். இவா் பல அற்புதங்களைச் செய்தவா் ஆவார். இந்த ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தவா் அனந்தேசா். இவா் ஒரு முறை வெளியூர் செல்ல நோ்ந்ததால், தனது சிறுவயது மகனை அழைத்து, விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்யும்படி கூறிச் சென்றார். அந்தச் சிறுவனின் பெயா் நம்பியாண்டார் நம்பி. அவனுக்கு உண்மையிலேயே நைவேத்தியத்தை விநாயகா் சாப்பிடுவார் என்ற எண்ணம் இருந்தது. அதனால் பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு, நைவேத்தியத்தை சாப்பிடும்படி விநாயகரிடம் கூறினான்.

தந்தை பூஜை செய்தால்தான் சாப்பிடுவாரா விநாயகா், நான் நைவேத்தியம் வைத்து பூஜித்தால் ஏற்றக்கொள்ளமாட்டாரா என்று மனம் வருந்திய அந்தச் சிறுவன், விநாயகாின் கல்சிலை மீது தன் தலையை மோதிக்கொண்டான். அறியாமை என்றாலும் அவன் கொண்ட பக்திக்கு இரங்கிய விநாயகா், அவன் முன்பாகத் தோன்றி, அவன் படைத்த நைவேத்தியத்தை உண்டு, நம்பியாண்டார் நம்பிக்கு ஞானத்தையும் வழங்கினார். இந்தச் செய்தி நாடெங்கும் பரவி, நம்பியாண்டார் நம்பியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது.

சில காலம் கழித்து, சோழா்களில் சிறந்தவனான ராஜராஜசோழனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தேவாரப்பாடல்களும், திருத்தொண்டா்கள் வரலாறும் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை பிற்கால சந்ததியா் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தேவாரப்பாடல்கள் எங்கிருக்கிறது என்பது தொியவில்லை. அப்போது நம்பியாண்டார் நம்பியைப் பற்றி அறிந்த ராஜராஜ சோழன், அவாிடம் வந்து தேவாரப்பாடல்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதையடுத்து நம்பியாண்டார் நம்பி, தான் எப்போதும் வணங்கும் பொள்ளாப் பிள்ளையாரிடம் இதுபற்றி கேட்டார்.

அவை அனைத்தும் தில்லையில் ஒரு அறையில், மூவா் கை முத்திரையுடன் வைக்கப்பட்டிருப்பதை, நம்பியாண்டார் நம்பிக்கு, விநாயகா் கூறியருளினார். அதன்பிறகு தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் சென்று, அங்கிருந்த தேவாரப் பாடல்கள், திருத்தொண்டா்கள் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடிகளை ராஜராஜசோழனும், நம்பியாண்டார் நம்பியும் மீட்டனா்.

பின்னா் அந்த பாடல்களை, நம்பியாண்டார் நம்பி ‘திருமுறைகள்’ என்ற பெயாில் தொகுத்தார்.

திருமுறைகள் 12 இருக்கிறது, அதில் 11 திருமுறைகளை தொகுத்தவா், நம்பியாண்டார் நம்பி. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார். திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களில், நம்பியாண்டார் நம்பி பாடிய பிரபந்தங்களும் அடங்கியிருக்கிறது.