பிரம்மோற்சவ விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.20.43 கோடி உண்டியல் வருமானம்


பிரம்மோற்சவ விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.20.43 கோடி உண்டியல் வருமானம்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவின்போது உண்டியல் வருமானமாக ரூ.20 கோடியே 43 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலை:

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்களில் மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்தியுடன் இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய முடிந்தது பெரிய விஷயமாகும்.

அதில் கருடசேவை அன்று கோவிலில் 81 ஆயிரத்து 318 பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கருடசேவை அன்று நான்கு மாடவீதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவில் 24 லட்சத்து 89 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்டியல் வருமானமாக ரூ.20 கோடியே 43 லட்சம் கிடைத்தது.

திருமலையில் 2 ஆயிரத்து 279 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. 4 ஆயிரத்து 635 தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க 1 லட்சத்து 20 ஆயிரம் ஜியோ டேக்குகள் கட்டப்பட்டன. பிரம்மோற்சவ விழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 9 கல்யாணக் கட்டாக்களில் 1,189 சவரத் தொழிலாளர்கள் பக்தர்களுக்கு தலைமுடி இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிரம்மோற்சவத்தின் போது 74.25 சதவீத அறைகள் விடுதிகளில் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரம்மோற்சவ விழா 8 நாட்களில் 20 லட்சத்து 99 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. கருடசேவை அன்று 7 லட்சத்து 87 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் மற்றும் காலை உணவும், 3 லட்சத்து 47 ஆயிரம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், 2 லட்சம் பக்தர்களுக்கு மோர் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

திருப்பதி மற்றும் திருமலையில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டன. அதில் ஆன்மிக புத்தகங்கள் ரூ.31 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. வாகனச் சேவையின்போது தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழியில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு 12 ஆயிரத்து 638 தடவைகளில் (டிரிப்) 3 லட்சத்து 47 ஆயிரம் பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 12 ஆயிரத்து 835 தடவைகளில் 4 லட்சத்து 47 ஆயிரம் பக்தர்களும் பயணம் செய்துள்ளனர்.

கருடசேவை அன்று அரசு பஸ்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2 ஆயிரத்து 345 தடவைகளில் 1 லட்சத்து 1,880 பக்தர்களும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 2 ஆயிரத்து 386 தடவைகளில் 72 ஆயிரத்து 637 பக்தர்களும் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story