ஞானத்தை வாரி வழங்கும் கீழமங்கலம் காளகஸ்தீஸ்வரர்


ஞானத்தை வாரி வழங்கும் கீழமங்கலம் காளகஸ்தீஸ்வரர்
x
தினத்தந்தி 6 Jun 2023 1:25 PM GMT (Updated: 6 Jun 2023 1:30 PM GMT)

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 7 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் என்ற ஊர். இங்கு பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.

பஞ்ச பூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்கும் காளகஸ்தீஸ்வரர் கோவிலைப் போலவே, இங்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. ஆந்திராவில் உள்ள காளகஸ்தீஸ்வரர் கோவிலில் செய்ய முடியாத வேண்டுதல்களை இங்கே நிறைவேற்றலாம் என்று சொல்கிறார்கள். இவ்வாலய இறைவனின் பெயர் 'காளகஸ்தீஸ்வரர்', இறைவியின் திருநாமம் 'ஞானாம்பிகை'. தேவர்களுக்கு பரப்பிரம்மத்தை உபதேசம் செய்ததால், அம்பிகைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. வயல்வெளிகளுக்கு நடுவே இயற்கை சூழலோடு அமைந்த இந்த ஆலயத்தின் தெற்கு வாசல் அருகே அரசமரமும், வேப்பமரமும் இணைந்து காணப்படுகின்றன. பிரதான வாசலாக கிழக்கு பார்த்து வாசல் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவனான காளகஸ்தீஸ்வரரும் கிழக்கு நோக்கியபடிதான் காட்சி தருகிறார். அவருக்கு அருகிலேயே தெற்கு நோக்கிய திசையில் ஞானம்பிகை, நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

நான்கு திருக்கரங்களுடன் காணப்படும் ஞானாம்பிகை அம்மன், முன் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளை காட்டியபடியும், பின் இரு கரங்களில் வலது கரத்தில் தாமரை மலரையும், இடது கரத்தில் நிலோற்பல மலரையும் தாங்கியிருக்கிறார். தரையில் ஜடா மகுடம் தரித்து, பிறை சந்திரனை சூடி, மூன்று கண்களுடன் பத்மத்தின் மேல் நின்றிருக்கிறார். சிவபெருமானின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் புராணங்கள் சொல்கின்றன. சூரியனின் ஒளியால் பகலில் தாமரையும், சந்திரனின் ஒளியால் இரவில் நீலோற்பலமும் மலர்கின்றன.

திருவானைக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியின் இரண்டு கைகளிலும் தாமரை மலர் உள்ளது. இது பகலில் மலரும் மலராகும். அதனால்தான் திருவானைக்கோவிலில் பகலில் உச்சிக் காலத்தில் அம்பிகை சிவ பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. இங்கு கீழமங்கலத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை வலக்கையில் தாமரையும், இடக்கையில் நீலோற்பலமும் வைத்திருப்பதால், இத்தல அம்பிகை இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்வதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.இத்தல இறைவனும் இறைவியும் ஞானத்தை வழங்குபவர்களாகவும், குழப்பத்தை தெளிய வைப்பவர்களாகவும், வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அன்னை ஞானாம்பிகையை வேண்டிக்கொண்டால் குழந்தைப் பேறும் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள்.

பக்தர்கள் வேண்டியதை வழங்கும் அருள்சக்தி நிறைந்ததாக இந்த ஆலயம் இருக்கிறது. ஆலயத்திற்கு வெளியே உள்ள அரசும், வேம்பும் இணைந்த மரத்தின் அடியில், இங்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதலைக் கூறி விளக்கேற்றி வழிபடுகிறார்கள். அகல் விளக்கு, தேங்காய் மூடியில் விளக்கு, வெள்ளை பூசணியில் விளக்கு என்று ஏற்றப்படுகிறது. அகல் விளக்கில் சிவப்பு துணியை திரியாகக் கொண்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். அதனோடு வெள்ளை மிளகும் சேர்த்து எரிக்கின்றனர். அதே போல் வெள்ளை பூசணியை இரண்டாக வெட்டி, அதன் நடுவில் ஒரு குழி ஏற்படுத்தி அதில் எண்ணெய் விட்டு, சிவப்பு துணியில் விளக்கேற்றுகிறார்கள். வழக்குகள் சாதகமாக அமைய, குடும்ப பிரச்சினைகள் நீங்க, குழந்தை பேறு கிடைக்க என்று சகல விதமான பிரச்சினை தீரவும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

பொதுவாக ஒரு ஆலயத்திற்குள் நுழையும் இடத்தில் விநாயகரும், முருகப்பெருமானும் வீற்றிருப்பார்கள். மூலவர் இருக்கும் கருவறை முன்பாக துவாரபாலகர்கள் இருப்பார்கள். இதுதான் வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். மூலவர் அருட்காட்சி தரும் கருவறையின் முன்பாக விநாயகரும், முருகப்பெருமானும் நின்ற கோலத்தில் இருப்பது வித்தியாசமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இவ்வாலய மூலவரின் கருவறையை சுற்றிலும் எட்டு தட்சிணாமூர்த்திகள் இடம்பெற்றுள்ளனர். கோவில் திருப்பணிகள் முழுமையாக முடியாத காரணத்தால், தற்போது மூலவரின் கருவறை முன்பாக இரண்டு தட்சிணாமூர்த்திகள் மட்டும் காட்சி தருகின்றனர். மற்றவர்களை பிரதிஷ்டை செய்வதற்கான பீடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடையும் வேளையில் அஷ்ட தட்சிணாமூர்த்திகளையும் நாம் ஒன்றாக தரிசிக்க இயலும்.

சிறப்புக்குரிய இந்த தலத்தின் தல தீா்த்தமாக, ஞான தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் ஆங்காங்கே சிவலிங்கத்தை தழுவியபடி இருக்கும் அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், அம்பிகையின் முகத்தை தன் வலது கையால் தாங்கிப் பிடித்து கொஞ்சும் நிலையில் உள்ள சிவபெருமான் போன்ற சுதைச் சிற்பங்கள் கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் கருவறையின் பின்புறம் பிரகாரத்தில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் சிவபெருமானின் சுதைச் சிற்பம் நம்மை கவருவதாக இருக்கிறது. இதன் முன்பாக பக்தர்கள் பலரும் சில நிமிடங்களாவது தியானத்தில் அமர்ந்து செல்கிறார்கள். இந்த இடம் மனதிற்கு அமைதியை தருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். ஆலயத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட மதில் சுவரின் மேற்பகுதி முழுவதும் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலும், பசுவந்தனையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் கீழமங்கலம் உள்ளது. பசுவந்தனையில் இருந்து ஓசனூத்து வழி செல்லும் பேருந்தில் வந்தால் கீழமங்கலம் விலக்கில் இறங்கி சுமார் அரை கிலோமீட்டர் உள்ளே சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

ஆண்டுக்கு 4 முறை அன்னாபிஷேகம்

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமி யில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கீழமங்கலம் காளகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை அன்னாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில், ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆண்டு வருடப்பிறப்பு, சித்திரை மாத பவுா்ணமி, ஐப்பசி மாதப் பிறப்பு மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமி ஆகிய 4 தினங்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒரு சிவலிங்கமாக பாவிக்கப்படும். எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தீவினை நீக்கும் ஞான பைரவர்

இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு, இங்குள்ள பைரவ மூர்த்தி. இவர் அம்பிகையின் திருநாமத்தை இணைத்தபடி 'ஞான பைரவர்'

என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு, நாய் வாகனத்தின் மீது அமர்ந்தபடி இந்த ஞான பைரவர் காட்சி தருகிறார். இவர் தன்னுடைய எட்டு கரங்களில் கட்கம், கேடயம், முத்சலம், கத்தி, புத்தகம், டமருகம், பாம்பு, ஏடு ஆகியவற்றை தாங்கியிருக்கிறார். தெற்கு நோக்கி அருள்புரியும் இவருக்கு அருகில் மேற்கு நோக்கியபடி சனி பகவான் காணப்படுகிறார். சனி பகவானின் குருவாக திகழ்பவர், பைரவர். இந்த ஆலயத்தில் பைரவரிடம் தீட்சை பெறும் கோலத்தில் சனி பகவான் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவரையும், சனி பகவானையும் சேர்த்து வணங்கினால், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகள் விலகும். அதோடு சனி பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களின் தாக்கமும் குறையும். இந்த ஆலயத்தில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் ஞான பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மற்ற நாட்களில் வரும் பக்தர்களின் வருகையைவிட, தேய்பிறை அஷ்டமியில் வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாகும். இந்த பைரவர் வழிபாட்டின் போது, அங்கு வரும் பக்தர்களின் குறைகளை சீட்டில் எழுதி வைத்து, அவர்களுக்காக மற்றவர்களும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் 'கூட்டுப் பிரார்த்தனை'யும் நடைபெறுவது விசேஷமான ஒன்று.


Next Story