ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடினர்


ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 17 Jun 2023 9:59 PM GMT (Updated: 18 Jun 2023 1:47 AM GMT)

ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடினர்.

ஈரோடு

ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முன்னதாக கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள். சிலர் அங்குள்ள பரிகார மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதன்பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சென்னிமலை முருகன் கோவில், கொடுமுடி நாகேஸ்வரர் கோவில், ஊஞ்சலூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன், நாகேஸ்வரர் கோவில், கோபி கூகலூரில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில், ஆஞ்சிநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம், பர்கூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story