சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 15 Jun 2023 9:33 PM GMT (Updated: 15 Jun 2023 9:38 PM GMT)

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ நாயகர்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தை வலம் வந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கொடுமுடி

இதேபோல் கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு வாசனை திரவியங்கள் மூலமாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்திபெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வைக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் மூலவர் மகேஸ்வரருக்கும் அபிஷேகத்துடன் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. முடிவில் உமா மகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் உள்பிரகார உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபி

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரர் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது.

இதேபோல் கோபி அருகே உள்ள காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவில், பவளமலை காசி விஸ்வநாதர் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

கூகலூர்

கோபி அருகே கூகலூரில் உள்ள மீனாட்சி அம்பிகை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் மீனாட்சி அம்பிகை நஞ்சுண்டேஸ்வரர் ரிஷப வாகனத்தில் கோவிலில் 3 முறை வலம் வந்தார். உற்சவத்தின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story