சப்த கயிலாய தலங்கள்


சப்த கயிலாய தலங்கள்
x

அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். செய்யாறின் தென் கரையில் அம்பாள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்த 7 இடங்களில் அமைந்த ஆலயங்கள் ‘சப்த கயிலாய தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

மண்டகொளத்தூர்

சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மண்டகொளத்தூர். இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.

தாமரைப்பாக்கம்

போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.

தென்பள்ளிப்பட்டு

போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு 'தென்பள்ளிப்பட்டு' என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.

நார்த்தாம்பூண்டி

தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் நார்த்தாம் பூண்டி உள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக திகழ்கிறது. இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பத்தைக் காணலாம்.

வாசுதேவம்பட்டு

திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வாசுதேவம்பட்டு. இந்த திருத்தலம் செய்யாற்றின் கரையிலேயே உள்ளது. இங்கு சவுந்திரநாயகி உடனாய பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முன் காலத்தில் 'ஆட்கொண்டேஸ்வரர்' என்று இந்த இறைவன் போற்றப்பட்டு உள்ளார். சப்த கயிலாய தலங்களில் 7-வதாக அமைந்த இந்தக் கோவிலை சோழர்கள் கட்டமைத்துள்ளனர். இத்தல ஈசனை, சித்திர, விசித்திரகுப்தர்கள் வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஆலயத்தின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை.

பழங்கோயில்

கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது 'மத்திய கயிலாசம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் 'ஷோடச மூர்த்தி' ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.

கரைப்பூண்டி

போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், 'கரைப்பூண்டி' என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் 'துலா ஸ்நானம்' சிறப்பானதாக கருதப்படுகிறது.


Next Story