2 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்த்தி விழா கோலாகலம்: விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு- நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்


2 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்த்தி விழா கோலாகலம்:  விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு-  நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
x

2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

திருநெல்வேலி

2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி

ஆவணி மாதம் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தியே விநாயகர் சதுர்த்தியாகும். இந்த சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் கேட்டது கிடைக்கும், அவருடைய அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்ற ஐதீகத்தால் விநாயகர் சதுர்த்தி அனைத்து பகுதிகளும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நெல்லை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெற்றன.

உச்சிஷ்ட விநாயகர்

5 நிலை ராஜகோபுரத்துடன் விநாயகருக்கு தனி கோவிலாக அமைந்துள்ள நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 22-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்களும், அதனை தொடர்ந்து 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

தீர்த்தவாரி

இதைத்தொடர்ந்து உற்சவர் விநாயகர் தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளி தாமிரபரணி நதியில் வைத்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உச்சிஷ்ட விநாயகரை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்தனர். கூட்டம் தாமிரபரணி ஆறு வரை நீண்ட வரிசையில் நின்றது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி வீதிஉலா நடந்தது.

பாளையங்கோட்டையை சேர்ந்த ஸ்ரீநிதி என்ற மாணவி மஞ்சள், குங்குமத்தில் 108 விநாயகர் உருவங்கள் வரைந்திருந்தார். இந்த படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

தியாகராஜநகர் விக்னவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலை சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு விநாயகர் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

எட்டெழுத்து பெருமாள்

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், கஜபூஜையும், கணபதிக்கு சோடச ஹோமம், அபிஷேக அலங்காரம், தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.

நெல்லை டவுன்

நெல்லை டவுனில் உள்ள கற்பக விநாயகர், வெற்றி விநாயகர், அக்கா சாலை விநாயகர், திருப்பணி விநாயகர், சந்தி விநாயகர், நெல்லை சந்திப்பில் உள்ள அரச விநாயகர், பாளையங்கோட்டை சேஷ்ட விநாயகர் மேலவாசல் விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கோலாகலத்துடன் பக்தர்கள் கொண்டாடினார்கள். வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து அதற்கு அவல், பொறி, பழம், தேங்காய், கொழுக்கட்டை உள்ளிட்ட பலகாரங்களை படைத்து வழிபாடு நடத்துகிறார்கள்.


Next Story