வேண்டாம் இந்த சீமைக்கருவேல மரம்


வேண்டாம் இந்த சீமைக்கருவேல மரம்
x
தினத்தந்தி 27 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-27T19:28:55+05:30)

பொதுவாக மரம் வளர்ப்போம்!, வளம் சேர்ப்போம்! என்ற கோஷங்கள்தான் உலகம் முழுவதும் எழுப்பப்படுகிறது. ஆனால், இப்போது தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரத்தை வெட்டுவோம்!, வளம் சேர்ப்போம்! என்ற கோஷம் எழும்பத்தொடங்கிவிட்டது.

பொதுவாக மரம் வளர்ப்போம்!, வளம் சேர்ப்போம்! என்ற கோஷங்கள்தான் உலகம் முழுவதும் எழுப்பப்படுகிறது. ஆனால், இப்போது தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரத்தை வெட்டுவோம்!, வளம் சேர்ப்போம்! என்ற கோஷம் எழும்பத்தொடங்கிவிட்டது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட இந்த சீமைக்கருவேல மரம், பூமிக்கடியிலுள்ள மிகக்கொஞ்சம் தண்ணீரைக்கூட உறிஞ்சிவளர்ந்துவிடும். தண்ணீரே இல்லாவிட்டாலும்கூட, காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, பச்சைப்பசேல் என்று வேகமாக வளரும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 1960–ம் ஆண்டில் மக்கள் அப்போது விறகுக்காக ஏராளமான மரங்களை வெட்டுகிறார்கள் என்றநிலையில், பயனுள்ள மரங்களை வெட்டுவதை தடுப்பதற்காக வேறெந்த பயனும் இல்லாத இந்த சீமைக்கருவேல மரம் நாடு முழுவதும் வளர்க்கப்பட்டது. விமானம் மூலம் இந்த விதைகளை தூவியதாகக்கூட சிலர் கூறுவார்கள். எல்லா மரங்களும் காற்றிலுள்ள கார்பன்–டைஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியேற்றும். ஆனால், இந்த சீமைக்கருவேல மரமோ ஆக்சிஜனை உட்கொண்டு, கார்பன்–டைஆக்சைடை வெளியேற்றி, மக்களுக்கு பெரும் தீமையை விளைவிக்கக்கூடியதாகும்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த மரத்தில் ஆடு, மாடுகளை கட்டி வளர்த்தால், அவை மலடாகிவிடும் என்று கிராமத்தில் இன்றும் சொல்கிறார்கள். இதன் தீமையை அறிந்துதான், கேரளாவில் எப்படி ஆற்று மணலை எடுக்கத்தடை விதித்தார்களோ, அதுபோல சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பதற்கும் மிகத்தீவிர நடவடிக்கை எடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த மரம் இருக்கும் இடங்களை தேடித்தேடிப்போய் வெட்டி, தீயிட்டு கொளுத்தி, இன்று அந்த மாநிலத்தின் எந்த இடத்திலும் சீமைக்கருவேல மரம் இல்லாத ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். கேரளாவின் நீர்வளத்தை பெருக்குவதற்கு எடுக்கப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளை, தமிழ்நாட்டிலும் எடுக்கவேண்டும் என்பது எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 10 சதுரமீட்டருக்கு ஒரு கருவேல மரம் என்றிருந்து பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த மரம், தற்போது சராசரியாக 4 சதுரமீட்டர் என்றாகி, விவசாய பரப்பையும் குறைத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், எப்போதுமே சமூக பிரச்சினைக்காக பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்திலும், பசுமைத்தீர்ப்பாயத்திலும் தொடரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை ஐகோர்ட்டில் இந்த சீமைக்கருவேல மரம் அகற்றப்படுவதற்கும், அப்படி அகற்றிய மரங்களை மீண்டும் வளராமல் இருப்பதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த மரங்களை கூண்டோடு ஒழிப்பதற்காக ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பி.ஏ.கலையரசன் ஆகியோர், ஜனவரி 10–ந் தேதிக்குள் மதுரை ஐகோர்ட்டு கிளையின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 13 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றிய தகவலை கோர்ட்டுக்கு ஜனவரி 11–ந் தேதி தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, சட்டசபையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘தமிழ்நாட்டிலுள்ள 85 ஆயிரத்து 400 குளங்கள், ஏரிகளில் சீமைக்கருவேல மரம் இயற்கையாகவே வளர்ந்துள்ளன. இதுபோல, 46 ஆயிரத்து 65 ஏக்கர் நிலப்பரப்பிலும் சீமைக்கருவேல மரம் வளர்ந்துள்ளது. இவற்றை படிப்படியாக அகற்றி, வேறு மரக்கன்றுகளை நடுவதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார். இப்போது, 13 மாவட்டங்களிலும் உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, சீமைக்கருவேல மரத்தை உடனடியாக அகற்றிதான் தீரவேண்டும். இதே வேகத்தை தமிழ்நாடு முழுவதும் காட்டி, கேரளாவைப்போல, தமிழ்நாட்டிலும் சீமைக்கருவேல மரங்கள் பூண்டோடு அழிக்கப்படவும், அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் வளராமல் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story