ரியல் எஸ்டேட்டின் மறுவாழ்வு


ரியல்  எஸ்டேட்டின்  மறுவாழ்வு
x
தினத்தந்தி 22 March 2017 9:30 PM GMT (Updated: 2017-03-22T19:04:27+05:30)

எந்த ஒரு மாநிலத்திற்கும் அந்த அரசு செலவழிக்கும் செலவை விட, வருவாய் அதிகமாக இருந்தால், உபரி பட்ஜெட்டாக இருக்கும். அத்தகைய நிலையில் தான், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை மக்களின் நன்மைக்காக அரசுகள் நிறைவேற்றமுடியும்.

ந்த ஒரு மாநிலத்திற்கும் அந்த அரசு செலவழிக்கும் செலவை விட, வருவாய் அதிகமாக இருந்தால், உபரி பட்ஜெட்டாக இருக்கும். அத்தகைய நிலையில் தான், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை மக்களின் நன்மைக்காக அரசுகள் நிறைவேற்றமுடியும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக கர்நாடக மாநில பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் ரூ.137 கோடி வருவாய் உபரியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ரூ.15 ஆயிரத்து 930 கோடி வருவாய் பற்றாக்குறையில் இருக்கிறது. நிதிப்பற்றாக்குறையை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் தான் அதிகம். ஆக, தமிழக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள கணக்குகளைப் பார்த்தால் உடனடியாக மாநிலத்தின் வருவாயை பெருக்கவேண்டியது மிக, மிக அவசியமாக இருக்கிறது.

தமிழகத்தின் வரவு–செலவு திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடியாகும். செலவோ, ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 293 கோடியாகும். அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக ரூ.46 ஆயிரத்து 332 கோடி, அரசு ஊழியர்களின் ஓய்வு ஊதியத்திற்காக ரூ.20 ஆயிரத்து 577 கோடி என அரசு ஊழியர்களின் சம்பளம், பென்சனுக்காக மட்டும் ரூ.66 ஆயிரத்து 909 கோடி போய்விடுகிறது. இதுதவிர மானியம் மற்றும் உதவி தொகைகளுக்காக ரூ.72 ஆயிரத்து 616 கோடி ஒதுக்கப்பட்டுவிடுகிறது. ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் ரூ.9 ஆயிரத்து 764 கோடியாகும். ஏற்கனவே அரசு வாங்கிய கடனுக்கு வட்டியாக ஆண்டுக்கு, ரூ.25 ஆயிரத்து 982 கோடி போய்விடுகிறது. ஆக, அரசின் வருவாயே ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 363 கோடி என்றநிலையில், இந்த இனங்களுக்கு மட்டுமே வரவுக்குமேல் மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 271 கோடி செலவானால், மேற்கொண்டு வளர்ச்சித்திட்டங்கள் இருக்கிறது. அதனால்தான் அரசு கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. தற்போது இந்த ஆண்டு அரசாங்கத்தின் கடன் ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக இருக்கும். எனவே உடனடியாக அரசு தனது வருவாயைப் பெருக்கவேண்டியதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். மாநிலத்தில் வருவாய் வரவுகளில் மிகமுக்கிய ஆதாரமாக விளங்குவது சொந்தவரி வருவாயாகும். இதில் பத்திரப்பதிவுத் துறையின் வருமானம் மிக, மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், இந்த நிதியாண்டில் பத்திரப்பதிவின் வருமானம் 24 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கு முக்கியகாரணம் கடந்த செப்டம்பர் மாதம் அங்கீகாரமற்ற நிலங்களை பதிவு செய்வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவுதான்.

சென்னை ஐகோர்ட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யவும், வேளாண்நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும் தடைவிதித்துள்ளது. இதுபோன்று விற்பனை செய்யப்பட்ட, விற்பனை செய்யப்படும் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசு எத்தகைய நடவடிக்கைகளை அதாவது எத்தகைய வரன்முறைகளை மேற்கொள்ளப்போகிறது? என்பதை விளக்கி, யாரையும் பாதிக்காத வகையில் தமிழக அரசு ஒரு முழுமையான கொள்கையைக் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது ஒருதிட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வேளாண் நிலங்களை வீட்டுமனைகளாக்க பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள், கருத்துக்களை பெறுவது முதல்நடவடிக்கையாகவும், வேளாண்மைத்துறையிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெறுவது அதைத்தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையாகவும், உள்ளூர் தாசில்தாரிடமிருந்து தடையில்லா சான்றிதழை வாங்குவது மூன்றாவது நடவடிக்கையாகவும் மேற்கொள்ள அனுமதி வழங்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த முடிவை அரசு எடுத்தாலும் உடனடியாக அது மிக எளிதான நடவடிக்கையாகவும், ரியல்எஸ்டேட் தொழிலுக்கு மறு வாழ்வு கொடுத்து வளர வைப்பதாகவும், சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் வீட்டுமனைகள் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையிலும் இருக்கவேண்டும்.

Next Story