பாதிப்புகள் பொதுமக்களுக்குத்தான்


பாதிப்புகள்  பொதுமக்களுக்குத்தான்
x
தினத்தந்தி 15 May 2017 9:45 PM GMT (Updated: 15 May 2017 4:04 PM GMT)

தமிழ்நாடு முழுவதும், போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும், போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நேற்று முதல் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் என்றாலும், நேற்றுமுன்தினம் இரவு முதலே அனைத்து இடங்களிலும் ஏராளமான பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அ.இ.அ.தி.மு.க. மற்றும் ஆதரவு சங்கங்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் 20,839 பஸ்களுடன், நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 79 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை சுமந்து கொண்டு, 94 லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்களை இயக்குகின்றன. ஒரு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றுகிறார்கள். இதுதவிர, 65 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் இருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாகவே, சில கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போக்குவரத்துக்கழகங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும், ஊழியர்கள் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண வரவுக்கும் - செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.4,500 கோடியை 'பிராவிடன்ட் பண்ட்', கடன்தொகை, பென்ஷன், கிராஜுட்டி கணக்குகளில் சேர்க்க வேண்டும். ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை ரூ.1,700 கோடியையும், பணியிலுள்ள தொழிலாளர்களுக்கான நிலுவை ரூ.300 கோடியையும் உடனடியாக வழங்கவேண்டும். மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும். ஓய்வூ கால சேமநலத்திட்ட பணபலன் நிறுத்தப்பட்டதை நிலுவையுடன் வழங்கவேண்டும். மற்ற அரசுத்துறை ஊழியர்களை விட, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் உள்ளது. எனவே, 50 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 12-வது ஊதிய ஒப்பந்தங்களில் பேசி தீர்வு காணப்பட்ட ஒப்பந்தப்பிரிவுகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பல கட்டங்களாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.  அரசு தரப்பில், இப்போது ரூ.750 கோடி தருகிறோம். செப்டம்பர் மாதத்தில் மேலும் ரூ.500 கோடி தருகிறோம் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இப்போது, திடீரென்று வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், அண்ணா தொழிற் சங்கம் உள்பட சில தொழிற்சங்கங்கள் பஸ்களை ஓட்டினாலும், அது போதுமானதாக இல்லை. ரெயில்வேத்துறையும் 5 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் ரெயில் கட்டணத்தில் 40 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. தனியார் பஸ்களும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி எவ்வளவோ ஏற்பாடுகள் செய்தாலும், பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் சொந்தமாக மோட்டார் வாகனங்கள் இருக்கும் என்று யாரும் சொல்லமுடியாது. ஆட்டோவிலோ, டாக்சியிலோ செல்வதற்கு எல்லோருக்கும் வசதியிருக்கிறது என்றும் சொல்ல முடியாது. எனவே, இதுபோன்று வேலைநிறுத்தங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, வேலைநிறுத்தத்தை தவிர்க்க அரசும், தொழிலாளர்கள் இரு தரப்புமே கருத்தில் கொள்ள வேண்டும். அரசை பொறுத்தமட்டில், கடந்த 5 ஆண்டுகளாக ஓய்வுபெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும். தொழிலாளர்களிடமிருந்து பிடித்த 'பிராவிடன்ட் பண்ட்' உள்பட அனைத்து தொகைகளையும் உடனடியாக செலுத்த வேண்டும். 'தொழிலாளர்களுக்கான உரிமைகளை கொடுக்க முடியவில்லையென்றால், தொழிலை நடத்துவதற்கான உரிமைகளை நிறுவனங்கள் இழந்து விடுகின்றன' என்று உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையை உருவாக்க போக்குவரத்துக்கழகங்களும், தொழிலாளர்களும் மற்ற பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

Next Story