விண்ணைத்தொடும் பெட்ரோல், டீசல் விலை


விண்ணைத்தொடும் பெட்ரோல்,  டீசல்  விலை
x
தினத்தந்தி 15 Sep 2017 9:30 PM GMT (Updated: 15 Sep 2017 5:33 PM GMT)

முன்னொரு காலம் ஆடம்பரம் என்று கருதப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் ஆகியவை இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது.

முன்னொரு காலம் ஆடம்பரம் என்று கருதப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் ஆகியவை இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடந்த மார்ச் மாதம் கணக்கின்படி தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடியே 38 லட்சத்து 45 ஆயிரத்து 64 மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கை செலவிலும், மாத பட்ஜெட்டிலும் பெட்ரோல், டீசலுக்கு என ஒரு கணிசமான தொகை போய்க் கொண்டி ருக்கிறது. சர்வதேசஅளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முன்பெல்லாம் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஜூன் 16–ந்தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறது. ஜூலை 1–ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 65 ரூபாய் 41 காசுகளாக இருந்தது. ஆனால் நேற்றைய பெட்ரோல் விலை 73 ரூபாய் 10 காசுகளாக உயர்ந்துவிட்டது. டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.61.87 ஆக இருந்தது. இவ்வாறு பெட்ரோல் விலையும், டீசல் விலையும் அபரிதமாக உயர்ந்து கொண்டே போவது எல்லோருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 50 டாலரை சுற்றிதான் இருக்கிறது. ஆக, கச்சா எண்ணெயின் விலை குறைவாகத்தான் இருக்கிறது.

மத்திய அரசாங்கம் விதிக்கும் கலால் வரி, மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டுவரி ஆகியவற்றால்தான் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்கிறது. பெட்ரோல் அடக்கவிலை ஒரு லிட்டருக்கு ரூ.30.42 தான். அதுபோல டீசல் அடக்கவிலை ஒரு லிட்டருக்கு ரூ.29.98 தான். விற்பனையாளர்களுக்கு ஒரு சிறிய தொகை கமி‌ஷன்போக மத்திய அரசாங்கம் விதிக்கும் கலால் வரியும், மாநில அரசாங்கம் விதிக்கும் மதிப்புகூட்டு வரியும் அடக்க விலைக்கும் அதிகமாக சேர்ந்து இவ்வளவு விலை உயர்வு பொதுமக்களின் தலையில் சுமத்துகிறது. ஆக பெட்ரோல், டீசல் விலையை விட வரிகள்தான் அதிகமாக இருக்கிறது. இதனால்தான் பொதுமக்களுக்கு இவ்வளவு பெரிய தாங்க முடியாத சுமை.

வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருக்கும்வகையில், கலால் வரியை குறைத்தனர். 2008 ஜூன் 27–ந்தேதி கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாதவகையில் ஒரு பீப்பாய்க்கு 141 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50.56 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.38.13 ஆகவும் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது 50 டாலரை சுற்றி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு அதிகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவரவர் மாத செலவை மட்டுமல்லாமல் விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கிறது. எனவே விலைவாசி உயர்வை குறைப் பதற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதும் ஓரள வுக்கு உதவியாக இருக்கும். இதற்கு ஒரேவழி பெட்ரோல் மீது கலால் வரி, மதிப்பு கூட்டு வரி வசூலிப்பதற்கு பதிலாக அதையும் சரக்கு மற்றும் சேவை வரி வளையத்திற்குள் கொண்டுவந்தால் அதிகபட்ச வரியான 28 சதவீத வரியை விதித்தால்கூட பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இதை மத்திய அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும்.

Next Story