காவல்துறையை நவீனமயமாக்குவதற்கு கூடுதல் நிதி


காவல்துறையை  நவீனமயமாக்குவதற்கு  கூடுதல்  நிதி
x
தினத்தந்தி 5 Oct 2017 9:30 PM GMT (Updated: 2017-10-05T18:48:40+05:30)

எந்தவொரு மாநிலம் என்றாலும் சரி, அங்கே சட்டம்–ஒழுங்கு சீரியமுறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற அச்சங்கள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், காவல்துறை பணியாற்றும் திறமையில்தான் இருக்கிறது.

ந்தவொரு மாநிலம் என்றாலும் சரி, அங்கே சட்டம்–ஒழுங்கு சீரியமுறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற அச்சங்கள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், காவல்துறை பணியாற்றும் திறமையில்தான் இருக்கிறது. அத்தகைய அளவில் இரவும், பகலும் பொதுமக்களுக்காக பணியாற்றும் துறை காவல்துறை. காலத்திற்கேற்ப காவல்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளையும், கருவிகளையும், புலனாய்வு முறைகளையும் நவீனப்படுத்தியாக வேண்டும். இதற்காக மத்திய அமைச்சரவைக்குழு அடுத்த 3 ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில போலீஸ்படைகளை நவீனப்படுத்த ரூ.25 ஆயிரத்து 60 கோடி செலவில் ஒரு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகையில் 80 சதவீதத்தை அதாவது ரூ.18 ஆயிரத்து 636 கோடியை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மீதித்தொகையை மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து செலவழிக்கவேண்டும்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்–ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன கருவிகள், போலீசாரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துக்கொண்டு செல்லுதல், போக்குவரத்து செலவு, அவசரத்திற்கு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்தல், வயர்லெஸ் போன்ற கருவிகளை நவீனப்படுத்துதல், ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குதல், தடயஅறிவியல் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு இனங்கள் வருகின்றன. ஆனால் பெரும்பகுதி அதாவது ரூ.10 ஆயிரத்து 132 கோடி ஜம்மு–காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மாவோயிஸ்டு அதிகம் உள்ள பகுதிகளில் போலீஸ் படையை நவீனப்படுத்த செலவழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி கணக்கு பார்த்தால் மீதமுள்ள தொகையில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு குறைவான தொகை கிடைக்குமோ? தெரியவில்லை. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக காவல்படையை நவீனப்படுத்த மிகஅதிகமான அக்கறை கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போதும் சரி, மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதும்போதும் சரி, காவல்துறையை நவீனப்படுத்த நிதி கேட்காமல் இருந்ததேயில்லை. 14.6.2016 அன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த நேரத்தில்கூட, தமிழக காவல்துறையை நவீனப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதிவேண்டும் என்று கேட்டிருந்தார். வடக்கே ஜம்மு–காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இந்திய எல்லையோரம் இருக்கிறது என்றால், தென்கோடி எல்லை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தமிழக கடலோர பகுதிகளிலும் நிச்சயமாக பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். எனவே, மத்திய அரசாங்கத்திடம் ஜெயலலிதா கோரிய ரூ.10 ஆயிரம் கோடியை தமிழ்நாடு காவல்துறைக்கு கேட்கவேண்டும். அதேநேரம் காவல்துறைக்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. தமிழ்நாடு காவல்துறையில் உயர்அதிகாரியான டி.ஜி.பி. முதல் போலீஸ்காரர்கள் வரை ஏற்பளிக்கப்பட்ட மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 560 ஆகும்.

தமிழ்நாட்டில் போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். மொத்த மக்கள்தொகையில் 222 பேருக்கு ஒரு போலீஸ்காரர் இருக்கவேண்டும் என்பது ஐக்கிய நாட்டு சபையின் பரிந்துரையாகும். ஆனால், தமிழ்நாட்டில் 640 பேருக்கு ஒரு போலீஸ்காரர்தான் இருக்கிறார். காவல்துறையினருக்கும் சட்டம்–ஒழுங்கு பராமரித்தல், குற்றத்தடுப்பு போன்றவற்றிற்கு பழையகால பயிற்சிகளை அளிக்காமல், நவீன காலத்திற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். அதேபோல, புலன்விசாரணைக்கேற்ற நவீன கருவிகள், போலீஸ்காரரின் துப்பாக்கிகள், வயர்லெஸ் கருவிகள் அனைத்துமே நவீனமயமாக்க வேண்டும். காவல்படையை நவீனமயமாக்கும் அதேநேரத்தில், காவல்துறையில் லஞ்சம், ஊழல் என்பது கிஞ்சித்தும் இருக்கக்கூடாது. போலீஸ்காரர்கள் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நியமனத்திலும் சரி, பதவி உயர்விலும் சரி, இடமாறுதலிலும் சரி, தகுதிதான் அடிப்படையாக இருக்கவேண்டும். தமிழக காவல்துறையில் லஞ்சம் என்பதே கிடையாது; மற்ற துறைகளில் லஞ்சத்தை கண்டுபிடிப்பதில்தான் தமிழக காவல்துறை முனைப்பாக இருக்கும் என்ற பெயரை பெறவேண்டும்.

Next Story