தொலைதூர மீனவர்களோடு தொலைதொடர்பு வசதி


தொலைதூர மீனவர்களோடு தொலைதொடர்பு வசதி
x
தினத்தந்தி 20 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-20T22:52:02+05:30)

கன்னியாகுமரி மற்றும் கேரளாவை உலுக்கிப்போட்ட ‘ஒகி’ புயல் சில மணிநேரம் வீசினாலும், பல ஆண்டுகளுக்கு மறக்கமுடியாத சேதங்களை உருவாக்கிவிட்டது.

ன்னியாகுமரி மற்றும் கேரளாவை உலுக்கிப்போட்ட ‘ஒகி’ புயல் சில மணிநேரம் வீசினாலும், பல ஆண்டுகளுக்கு மறக்கமுடியாத சேதங்களை உருவாக்கிவிட்டது. நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகிவிட்டார்கள். இதுபோல, ரப்பர், வாழை, கிராம்பு, மரவள்ளி, மிளகு போன்ற பயிர்களும் பெருமளவில் அழிந்துவிட்டன. தேக்கு, பலா போன்ற மரங்களெல்லாம் சாய்ந்துவிட்டன. கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களில் இன்னமும் 433 பேர் கரை திரும்பவில்லை என்ற அதிகாரபூர்வமான தகவலை மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திறமைபெற்றவர்கள். 40, 50 நாட்கள் கடலிலேயே தங்கியிருந்து 1,500 கிலோமீட்டர் தூரம்வரை சென்று மீன்பிடிப்பார்கள். அவர்களிடம் உள்ள ‘வயர்லெஸ் கருவி’ பருவநிலை சீராக இருந்தால் 100 கிலோமீட்டர் தூரம்வரை அவர்களோடு தொடர்புகொள்ள முடியும். செல்போன்களாலும் கரைக்கு தொடர்புகொள்ளமுடியாது. இதுபோன்ற நேரங்களில் தொலைதூரங்களில் உள்ள மீனவர்களை எச்சரிக்க அந்தப்பக்கம் செல்லும் கப்பல்களுக்கு தகவல் கொடுத்துத்தான், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கமுடியும்.

தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ செயற்கைகோளோடு இணைக்கப்பட்ட ஒரு உயர்தொழில்நுட்ப தொலைதொடர்பு சாதனத்தை உருவாக்கி உள்ளது. இந்த சாதனத்தை பயன்படுத்தினால் 1,500 கிலோமீட்டர் தூரம்வரை இன்டர்நெட் வசதியோ, தொலைதொடர்பு கோபுர வசதியோ இல்லாமல், அவர்களோடு தொடர்பு கொள்ளமுடியும். அடுத்த சிலமாதங்களில் இந்த தொலைதொடர்பு சாதனம் மீனவர்களுக்கு வழங்குவதற்காக வணிகரீதியாக வெளிவர இருக்கிறது. இதன்படி, மீனவர்கள் செல்லும் படகுகளில் ஒரு சாதனத்தை பொருத்திவிட்டால், கரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து, மீனவர்கள் கையில் உள்ள இதற்கென வடிவமைக்கப்பட்ட செல்போனில் செய்தியாகவோ, வீடியோவாகவோ எச்சரிக்கை அனுப்பமுடியும். இதுபோல, வானிலை முன்அறிவிப்புகள் மற்றும் ஏதாவது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவானால் மீனவர்களுக்கு தெரிவிக்க முடியும். கேரளா மாநிலம் இப்போதே இத்தகைய 500 சாதனங்களை வாங்க முதல்கட்டமாக ‘இஸ்ரோ’விடம் ஆர்டர் கொடுத்துவிட்டது.

தமிழக மீன்வளத்துறையும் உடனடியாக இந்த சாதனத்தைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து, கேரளாபோல தொலைதூரங்களுக்குச் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், மீனவர்களுக்காக ஏற்கனவே வாங்கப்பட்டுள்ள ‘வாக்கி டாக்கி’கள், ‘ரிப்பிட்டர் டவர்’ என்று அழைக்கப்படும் தகவலைபெற்று மறுஒலிபரப்பு செய்வதற்கான கோபுரங்களை 17 இடங்களில் அமைக்காததால் அப்படியே எந்த பயன்பாடும் இல்லாமல் கிடக்கிறது. 2010–ல் தி.மு.க. அரசாங்கத்தில் 3,300 ‘வாக்கி டாக்கி’கள் வழங்கப்பட்டன. இதற்காக தொண்டி, பாம்பன், ஏர்வாடி ஆகிய இடங்களில் இத்தகைய கோபுரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை சரியாக பராமரிக்கப்படாததால், அந்த ‘வாக்கி டாக்கி’கள் பயன்படாமல் இருக்கின்றன. எனவே உடனடியாக தகவலைப்பெற்று, தகவலை பரிமாறும் வகையிலான இத்தகைய 3 கோபுரங்களையும் பராமரித்து புதிதாக 17 கோபுரங்களையும் அமைத்து எல்லா வாக்கி டாக்கிகளையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வழிவகை செய்யவேண்டும்.

Next Story