தொழில் அதிபர்களை அழைக்கும் ராஜ்பவன்


தொழில் அதிபர்களை அழைக்கும் ராஜ்பவன்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:30 PM GMT (Updated: 26 Feb 2018 5:35 PM GMT)

கவர்னர் உதவிசெய்வார் என்ற நம்பிக்கையை தொழில் முனைவோர் உள்ளத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விதைத்துவிட்டார்.

மிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றபிறகு, தமிழக மக்களின் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துவருகிறார். மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்யும்போது ஏதோ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டோம், உரையாற்றினோம், திரும்பிவந்தோம் என்று இருந்துவிடுவதில்லை. அந்தந்த மாவட்டங்களில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்திவரும் அவர், அனைத்து உயர்அதிகாரிகள் கூட்டத்தையும் கூட்டி ஆய்வு நடத்திவருகிறார். அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களெல்லாம் மக்களுக்கு போய்ச்சேருகிறதா?, அதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என்பதுபோல, பல முன்னேற்ற திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து உரையாடுகிறார். இதுவரையில், கோயம்புத்தூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், சேலம், தஞ்சாவூர், தர்மபுரி, வேலூர், மதுரை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து இதுபோன்ற ஆய்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறார். இன்று மீண்டும் காஞ்சீபுரம் செல்கிறார். பல்கலைக்கழக நிர்வாகங்களாகட்டும், அரசு நிர்வாகங்களாகட்டும் தமிழக அரசிலும், மத்திய அரசிலும் திறம்பட பணியாற்றி நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் கூடுதல் தலைமைச்செயலாளர் ராஜகோபால் கவர்னருக்கு உறுதுணையாக இருக்கிறார். 

இந்தநிலையில், கடந்த 23–ந்தேதி சென்னையில் நடந்த ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் 3 நாள் மாநாட்டை தொடங்கி வைத்தபோது, அவர் உரை தொழில் அதிபர்களுக்கு மிகவும் நம்பிக்கையை ஊட்டும்வகையில் அமைந்தது. இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘அங்கே கூடியிருந்த ஜெயின் சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவேண்டும். தமிழ்நாட்டில் பல சாதகமான சூழ்நிலைகள் இருக்கின்றன. இது ஒரு அமைதியான மாநிலம். சட்டம்–ஒழுங்கு திறம்பட நிலவுகிறது. தொழில்தொடங்க அனைத்து ஒப்புதல்களையும் பெறுவதற்கு ஒற்றை சாளரமுறை இருக்கிறது. நடைமுறையில் இருக்கும் வணிக எளிதாக்குதல் சட்டம், ஒவ்வொரு ஒப்புதலையும், ஒவ்வொரு காலக்கெடுவுக்குள் பெறுவதற்கான நிலைகளை உருவாக்கி இருக்கிறது. குறைகள் இருந்தால் அதை தீர்ப்பதற்கும் ஏற்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன’’ என்றார். இது தொழில் முனைவோரை ஈர்க்கும் பேச்சாக அமைந்தது. 

அதன்பிறகு கவர்னர் பேசும்போது, ‘‘நான் உங்களுடன் இருக்கிறேன், உங்கள் தொழில்களை தமிழ்நாட்டில் தொடங்குங்கள், உங்களுக்கு ஏதாவது இடர்பாடு இருந்தால் ராஜ்பவன் கதவுகள் உங்களுக்கு திறந்து இருக்கிறது, நீங்கள் என்னிடம் வரலாம், முதல்–அமைச்சருடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது, நான் அன்போடு அவரிடம் சொல்வேன், உங்கள் வேலைகள் உடனடியாக முடிந்துவிடும், தாமதம் இருக்காது, அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கு உகந்தசூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது, முன்பு நிர்வாகத்தில் சிவப்பு நாடா போன்ற சில பிரச்சினைகள் இருந்தன, சமீபத்தில் தமிழகஅரசு ஒற்றை சாளரமுறை கொண்டுவருவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது, ஒற்றை சாளரமுறை இருந்தால் சிவப்பு நாடா முடிவுக்கு வந்துவிடும்’’ என்று கூறினார். முதல்–அமைச்சரின் உறுதிமொழியும், கவர்னரின் அழைப்பும் நிச்சயமாக தொழில்முனைவோரை தமிழகத்திற்கு ஈர்க்கும். அரசு நிர்வாகத்தில் ஏதாவது தாமதம் இருந்தால் அதை நிவர்த்திசெய்ய ராஜ்பவனுக்கு செல்லலாம். கவர்னர் உதவிசெய்வார் என்ற நம்பிக்கையை தொழில் முனைவோர் உள்ளத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விதைத்துவிட்டார்.

Next Story