காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் ஏன்?


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் ஏன்?
x
தினத்தந்தி 1 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-02T00:27:27+05:30)

கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரிநீர் பங்கீடு குறித்து காலம் காலமாக கருத்துவேற்றுமைகள் இருந்தன.

ர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரிநீர் பங்கீடு குறித்து காலம் காலமாக கருத்துவேற்றுமைகள் இருந்தன. இதுகுறித்து முடிவுசெய்ய நியமிக்கப்பட்ட காவிரி நடுவர்மன்றம் 5–2–2007 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த இறுதிதீர்ப்பில், கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நீர்ஒதுக்கீடு பற்றி தீர்ப்பளித்து, இந்த நடுவர்மன்ற தீர்ப்புப்படி தண்ணீர் திறந்துவிடுவதை நிர்வகிக்க காவிரி மேலாண்மை வாரியமும், காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கவேண்டும் என்று தீர்ப்புகூறியது. இந்த தீர்ப்பை மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பா.ஜ.க. அரசாங்கமும் அமல்படுத்தவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று, கர்நாடகம் அழுத்தம்கொடுத்து வந்தது. இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 16–2–18 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத்தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஒரே ஆறுதலான வி‌ஷயம் என்னவென்றால், காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்புப்படியான அமைப்பை, அதாவது காவிரி மேலாண்மைவாரியம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவையும் மத்திய அரசாங்கம், 6 வாரங்களில் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. தீர்ப்பில் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. அந்தந்த காலக்கட்டங்களில் இந்த தண்ணீராவது ஒழுங்காக திறந்துவிட ஒரு கண்காணிப்பு அமைப்பாக ‘காவிரி மேலாண்மை வாரியம்’ 6 வாரங்களுக்குள், அதாவது மார்ச் மாதம் 30–ந் தேதிக்குள் அமைக்கப்பட்டுவிடும் என்று தமிழக மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, கடந்த மாதம் 24–ந் தேதி சென்னையில் மானியவிலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பிரதமர் கலந்துகொண்டபோது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியநேரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பர்த்துக்கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முதல்–அமைச்சர் தலைமையில், அனைத்துக்கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் இதுபற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ‘இது உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினை, இது ஒரு பெரியவேலை, இதுகுறித்து எந்த வாக்குறுதியும் கூறவிரும்பவில்லை’ என்று மழுப்பலாக பதில் சொன்னது பெரியவருத்தத்தை அளித்துள்ளது. நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. இன்னமும் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என்றால், இதில் அரசியல் காரணம் இருக்கிறது என்று தமிழக மக்கள் சந்தேகப்படுகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் காங்கிரசும், பாஜ.க.வும் மாறி மாறி ஆட்சி செய்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும்நாள் எதுவும் பக்கத்தில் தெரியவில்லை. இப்போது மே மாதம் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக மத்திய அரசாங்கம் செயல்பட முடிவெடுத்துவிட்டதோ? என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அரசியல் வேறு, உச்சநீதிமன்ற தீர்ப்பு வேறு என்றவகையில், மத்திய அரசாங்கம் மார்ச் 30–ந் தேதிக்குள் காவிரி மேலாண்மைவாரியத்தை அமைக்க வேண்டும். உடனடியாக அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும்.

Next Story