துரதிர்ஷ்டமான துப்பாக்கிச்சூடு


துரதிர்ஷ்டமான  துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 23 May 2018 9:30 PM GMT (Updated: 23 May 2018 6:27 PM GMT)

தமிழக காவல்துறையில் துப்பாக்கி சூடு என்பது அடிக்கடி நடந்தது இல்லை. அதிகபட்சமாக போலீஸ் தடியடிதான் நடக்குமேதவிர, துப்பாக்கிச்சூடு என்பது எப்போதாவது ஒருமுறை நடப்பதாகத்தான் இருந்தது.

மிழக காவல்துறையில் துப்பாக்கி சூடு என்பது அடிக்கடி நடந்தது இல்லை. அதிகபட்சமாக போலீஸ் தடியடிதான் நடக்குமேதவிர, துப்பாக்கிச்சூடு என்பது எப்போதாவது ஒருமுறை நடப்பதாகத்தான் இருந்தது. இதற்கு முன்பு 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரமக்குடியில் நடந்த கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிர் இழந்தனர். அதன்பிறகு, இப்போது 7 ஆண்டுகள் கழித்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானதும், ஏராளமான பொதுமக்களும், போலீசாரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருவதை அறிந்து தமிழகமே கண்ணீர் வடிக்கிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை என்பது வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமாகும். தாமிரத்தாதுவில் இருந்து தாமிரத்தை தனியாக பிரித்தெடுக்கும் தொழிற்சாலைதான் இது. இதற்கு மூலப்பொருளான தாமிரத்தாது ஆஸ்திரேலியா நாட்டில் இருந்துதான் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த தொழிற்சாலையை தொடங்க குஜராத், கோவா, கேரளா ஆகிய மாநிலங்கள் அனுமதி கொடுக்கவில்லை. மராட்டிய மாநிலத்தில் அனுமதிக்கொடுத்து நிர்மாண வேலைகள் தொடங்கியபிறகு வெளியேற்றப்பட்டது. தூத்துக்குடியில் தொடங்க 1994–ல் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. இந்த ஆலையால் தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது மக்களின் குற்றச்சாட்டு. இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள குமரெட்டியபுரம் கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் எல்லாம் மாசுபட்டுவிட்டது என்றும், கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்திவருகிறார்கள்.

நேற்று முன்தினம் 100–வது நாள் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு, அந்த ஊர் கிராம மக்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள நகர, கிராம மக்கள் எல்லோருமே பெருந்திரளாக கூடிநின்றனர். ஊர்வலம் கட்டுக்கடங்காமல் தூத்துக்குடி நகரமே போர்க்களமாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் ஏராளமான சேதங்களும், காயமும் ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்றும் தொடர்ந்து தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு, போலீஸ் வாகனத்துக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். இருநாட்களிலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு அந்தக்கூட்டத்தை சட்டவிரோத கூட்டம் என்று தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அறிவிக்கவேண்டும். கூட்டத்தை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்கவேண்டும். கலைந்து செல்லாவிட்டால் முதலில் தடியடி, தொடர்ந்து கண்ணீர்புகை, அதன்பிறகு ஆகாயத்தை நோக்கி சுட்டுவிட்டு, பின்பு இடுப்புக்கு கீழ்தான் சுடவேண்டும் என்று இருக்கிறது. இந்த நடைமுறைகளெல்லாம் பின்பற்றப்படவில்லை என்று ஒருகுறை இருக்கிறது. இந்த நடைமுறைகளெல்லாம் பின்பற்றப்பட்டதா?, உளவுப்பிரிவு போலீசார் முதலிலேயே இவ்வளவு கூட்டம் ஆக்ரோ‌ஷத்தோடு வரும் என்று சொன்னார்களா? என்பதெல்லாம் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான நீதி விசாரணையின்போதுதான் தெரியும். எது எப்படியோ, துரதிர்ஷ்டமான துப்பாக்கிச்சூடு நடந்துவிட்டது. இதுபோன்று துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு போகாத சூழ்நிலையை உருவாக்க இருதரப்பும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக தூத்துக்குடியில் அமைதி திரும்பவேண்டும்.

Next Story