மிதக்கும் அணுமின்நிலையம்


மிதக்கும் அணுமின்நிலையம்
x
தினத்தந்தி 24 May 2018 9:30 PM GMT (Updated: 24 May 2018 6:12 PM GMT)

தொழில்துறை என்றாலும் சரி, மனிதனின் அன்றாட தேவையென்றாலும் சரி, மின்சாரம் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற சூழ்நிலை இருக்கிறது.

தொழில்துறை என்றாலும் சரி, மனிதனின் அன்றாட தேவையென்றாலும் சரி, மின்சாரம் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற சூழ்நிலை இருக்கிறது. அதனால்தான் மத்திய அரசாங்கம் சமீபத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கிய சாதனையை பூரிப்போடு அறிவித்தது. அடுத்து, அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவேண்டிய இலக்கில் இருக்கிறது. ஆக, அடுத்த சில ஆண்டுகளில் மின்சாரத்தேவை மிகமிக அதிகமாக இருக்கும். அந்தளவுக்கு நிச்சயமாக உற்பத்தியில் வேகம் இருந்தால்தான், பெருகிவரும் மின்சாரத்தேவையை சமாளிக்க முடியும். தமிழ்நாட்டில் தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி குதிரைவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. மின்சார உற்பத்தியை எடுத்துக்கொண்டால், அனல்மின்சார நிலையங்களும், நீர்மின்சார நிலையங்களும், எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களும் செயல்படுகிறது. இதுதவிர, கூடங்குளத்தில் அணுமின் நிலையமும் மின்சார உற்பத்தியை தீவிரமாக கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், மரபுசாரா மின் உற்பத்தியாக சூரிய வெப்ப மின்சார நிலையங்களும், காற்றாலை மின்சார நிலையங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

தற்போது கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் இயங்கி வருகின்றன. 3-வது, 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. 5-வது, 6-வது அணுஉலைகள் அமைப்பது தொடர்பாக கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடியும், ரஷிய அதிபர் புதினும், செயின்ட் பீட்டர் பர்க் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூடங்குளத்தை பொறுத்தமட்டில், 6 அணுஉலைகள் அமைப்பதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. நிலக்கரியை பயன்படுத்தி இனி வெகுகாலத்திற்கு அனல் மின்சார நிலையங்களை அமைக்க முடியாது. ஏனெனில், நிலக்கரி பற்றாக்குறையும் ஏற்படும். நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் அனல் மின்சார நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும். புனல் மின்சார நிலையங்கள் அமைப்பதற்கும் இனி வாய்ப்பு இல்லை. இந்தநிலையில், அணுமின்நிலையம் மூலம் மட்டுமே எதிர்கால மின்தேவையை பூர்த்திசெய்ய முடியும்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் 2011-ம் ஆண்டே கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு, பாதுகாப்புக்கு அணுமின்சக்தி மிகவும் அவசியம் என்று உறுதிபட தெரிவித்தார். ஆனால் அணுமின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக பல எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. எந்தநேரமும் ஆபத்தை விளைவிக்கும் என்ற சந்தேகங்களும் கிளப்பப்படுகின்றன. இந்தநிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிர்வகித்து வரும் ரஷிய அரசு நிறுவனமான ரொசாட்டம் உலகிலேயே முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷியாவில் வடிவமைத்துள்ளது. இந்த மிதவை அணுமின்நிலையம் ரஷியாவின் கிழக்கு எல்லையில் உள்ள சுக்காட்கா பகுதியின் பெவெக் நகருக்கு இழுத்துச்செல்லப்படும். மின்சாரம் தேவைப்படும் எந்த கடற்கரை நகரிலும் இந்த மிதவை அணுமின்நிலையத்தை கொண்டு 70 மெகாவாட் மின்உற்பத்தி செய்யமுடியும். தமிழ்நாட்டில் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. இந்த அணுமின் நிலையத்தை அமைப்பதால் கடலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்குமா?, கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்குமா?, கார்பன் கழிவுகளை எவ்வாறு கையாளலாம்? என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்து துளியும் பாதிப்பு இல்லையென்றால் தமிழ்நாட்டில் கடலுக்குள் இந்த மிதவை அணு மின் நிலையங்களை அமைக்க முடியுமா? என்பதை பரிசீலிக்கவேண்டும்.

Next Story