உடனடி தேவை விமான ஆம்புலன்ஸ்


உடனடி தேவை விமான ஆம்புலன்ஸ்
x
தினத்தந்தி 18 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-19T01:10:26+05:30)

வெளியூர்களில் மூளைச்சாவு அடைபவர்கள் இருதயத்தையும், நோயாளிகளையும் சென்னை, மதுரைக்கு கொண்டுவர தற்போது வசதிபடைத்தவர்களே வாடகைக்கு விமானம் எடுத்து கொண்டுவர முடிகிறது.

மிழக மருத்துவத்துறை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. கடந்தவாரத்தில் சென்னையிலுள்ள அரசு பன்நோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவன் பிரவீனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரிடம் இருந்து தானமாக பெற்ற இருதயம், இப்போது 10 வயது சிறுவன் பிரவீனின் இருதயமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுபோல, அடையாறு மலர் மருத்துவமனையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சென்னையில் தையல் தொழிலாளியாக பணிபுரியும் ஒருவரின் மகள் தரனும் பர்வீன் என்ற 15 வயது சிறுமிக்கும் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பன்நோக்கு மருத்துவமனை, பொது மருத்துவமனை, மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொதுமருத்துவமனை ஆகிய 3 அரசு மருத்துவமனைகளிலும், அப்பல்லோ மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, மலர் மருத்துவமனை போன்ற தனியார்  மருத்துவமனைகளிலும் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துவருகின்றன. 

இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புதானம் செய்வதற்கான விழிப்புணர்வு, 2008–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20–ந்தேதி ஹிதேந்திரன் என்ற 15 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்தநேரத்தில் ஏற்பட்டது. திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெற்றோர்களான டாக்டர்கள் அசோகன், புஷ்பாஞ்சலி ஆகியோர் தங்கள் அன்பு மகனின் இருதயத்தை தானமாக கொடுக்க முன்வந்தனர். மனிதாபிமானத்தின் உச்சக்கட்டமான இந்த கருணைச்செயல் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அப்போது முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி, டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது அறிவித்தார். தற்போது 61 இருதயங்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில், 51 இருதயம் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. 10 இருதயம் வெளிநாட்டினருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இருதய தானத்திற்காக தமிழ்நாட்டில் 150 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது, 10 வெளிநாட்டினருக்கு ஏன் இருதயம் வழங்கப்பட்டது? என்று பரபரப்பான ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. 

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இதற்கு பதில் அளிக்கும்போது, ‘ஏதாவது இருதயம் தானமாக பெறப்பட்டால் பதிவு செய்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவ்வாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னுரிமை பட்டியலில் யாருக்கும் பொருந்தவில்லை என்றால், அல்லது ஏற்க முன்வராமல் இருந்தால், முதலில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களுக்கும் பொருந்தவில்லையென்றால், இந்திய அளவில் பதிவு செய்த இந்தியர்களுக்கும், அவர்களுக்கும் பொருந்தவில்லையென்றால், அந்த உறுப்பு வீணாகிவிடக்கூடாது என்ற காரணத்தினால், காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். அமைச்சர் சொல்லும் காரணங்கள் சரியாக இருந்தாலும், இதில் இன்னமும் தீவிரமாக செயல்பட்டு இன்னும் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு, தமிழ்நாட்டில் பெறப்படும் தானம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யவேண்டும். விமான வசதியில்லாத நேரத்தில் வெளியூர்களில் மூளைச்சாவு அடைபவர்கள் இருதயத்தையும், நோயாளிகளையும் சென்னை, மதுரைக்கு கொண்டுவர தற்போது வசதிபடைத்தவர்களே வாடகைக்கு விமானம் எடுத்து கொண்டுவர முடிகிறது. ஏழை நோயாளிகளும் இந்த வசதியைப்பெற அரசே உடனடியாக விமான ஆம்புலன்ஸ் வாங்கி தயார்நிலையில் வைக்கவேண்டும்.

Next Story