விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை


விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை
x
தினத்தந்தி 6 July 2018 9:30 PM GMT (Updated: 6 July 2018 5:00 PM GMT)

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயம் லாபகரமாக இல்லாத சூழ்நிலையில் விவசாய தொழிலைவிட்டு, வேறுதொழிலுக்கு போக ஏராளமான விவசாயிகள் முற்பட்டுவிட்டார்கள்.

ந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயம் லாபகரமாக இல்லாத சூழ்நிலையில் விவசாய தொழிலைவிட்டு, வேறுதொழிலுக்கு போக ஏராளமான விவசாயிகள் முற்பட்டுவிட்டார்கள். இந்தநிலை தடுக்கப்படவேண்டும். 2007–ம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையில் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவுவிலை என்பது ஒட்டுமொத்த உற்பத்தி செலவோடு 50 சதவீத உற்பத்தி செலவைக்கூட்டினால் வரும் தொகையைக் கொண்ட விலையாக நிர்ணயிக்கப்படவேண்டும். அப்படியென்றால்தான் விவசாய தொழில் லாபகரமாக இருக்கும் என்ற பரிந்துரையை அளித்தார். அன்றுமுதல் இன்றுவரை விவசாயிகளின் ஒரேகோரிக்கை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என்பதுதான். 

இந்தநிலையில், பா.ஜ.க. ஆட்சி வருவதற்கு முன்பே தேர்தல் அறிக்கையிலும், தொடர்ந்து பலநேரங்களிலும் பிரதமர் நரேந்திரமோடி, ‘‘2022–க்கு முன்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’’ என்று சூளுரைத்து வருகிறார். அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது. இனி எப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே பரவலாக இருந்து வந்தது. சமீபத்தில் பொருளாதாரம் தொடர்பான மத்திய மந்திரி சபை கமிட்டி 14 சம்பா பயிர்களுக்கு இந்த ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கும்வகையில் ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவுப்படி நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காசோளம், துவரம்பருப்பு, பாசிபருப்பு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி விதை, சோயாபீன்ஸ், பருத்தி நடுத்தரவகை, எள், கருஞ்சீரகம் ஆகிய 14 விளைபொருட்களுக்கு கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவுவிலையைவிட, இந்த ஆண்டு 3.70 முதல் 52.47 சதவீதம்வரை குறைந்தபட்ச ஆதரவுவிலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ.15 ஆயிரம் கோடி இந்த ஆண்டு செலவாகும். 

கேழ்வரகுக்கு மட்டும்தான் கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவுவிலையைவிட 52.47 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கேழ்வரகின் குறைந்தபட்ச ஆதரவுவிலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,900 ஆகும். இப்போது அது ரூ.2,897 ஆக உயர்ந்துள்ளது. நெல்லுக்கு கடந்த ஆண்டு விலை ரூ.1,550 ஆக இருந்தது. இப்போது ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 12.90 சதவீத உயர்வாகும். உளுத்தம்பருப்புக்குத்தான் குறைவான அளவாக 3.70 சதவீதம் விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் உயர்த்தும் வகையில் இருந்து, சற்று அதிகமாக இருக்கிறதே தவிர, குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப் படவில்லை என்ற வகையில் விவசாயிகளுக்கு சற்று மனநிறைவு தந்தாலும், முழு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஏனெனில், இந்த விலைஉயர்வு விவசாயத்துக்கான செலவோடு, குடும்பத்தினர் விவசாய வேலை செய்ததற்கான சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்துப்படி, ஒட்டுமொத்த செலவும் குறிப்பாக மூலதன செலவோடு அந்த நிலத்திற்கான குத்தகை செலவையும் சேர்த்து, அதற்குமேல் 

50 சதவீதம் நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதுதான். அதிக தண்ணீர் தேவை இல்லாத தானிய வகைகளான சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றுக்கு ஆதரவு விலை உயர்த்தியிருப்பது நிச்சயம் வரவேற்கத் தக்கதாகும். ஆனால் நெல்லுக்கு கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் குறைந்த அளவு தூரத்தில் இருப்பதுபோல, மற்ற தானியங்களுக்கும் விவசாயிகள் எளிதில் அணுகக்கூடிய தூரத்தில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவேண்டும்.

Next Story