சர்க்கஸ் தொழிலுக்கு மூடுவிழாவா?


சர்க்கஸ் தொழிலுக்கு மூடுவிழாவா?
x
தினத்தந்தி 31 Jan 2019 10:30 PM GMT (Updated: 31 Jan 2019 1:29 PM GMT)

காலம் காலமாக மக்களை மகிழ்விக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக சர்க்கஸ் அமைந்து வந்தது.

மிருககாட்சி சாலைகள் உள்ள ஊர்களைத்தவிர, மற்ற ஊர்களில் சாதாரண பாமரமக்கள், காட்டில் வாழும் அரிய விலங்குகளை பார்க்கமுடியாது. அதுமட்டுமல்லாமல், மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களை பார்க்கத்தான் முடியுமேதவிர, அதன் சாகசசெயல்கள் எதையும் பார்க்கமுடியாது. அதை சர்க்கசில்தான் பார்க்கமுடியும். விலங்குகள் வித்தைகாட்டும் காட்சிகளை அமைக்கும் சர்க்கஸ் என்ற கேளிக்கை நிகழ்ச்சி பிரான்சு நாட்டில் 1782–ம் ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பிலிப் ஆஸ்ட்டிலே என்ற ராணுவ அதிகாரியாவார். 

பாரீஸ் நகரில் அவர் தொடங்கிய முதல் சர்க்கஸ் பெயர் ‘ஆம்பிதியேட்டர் அங்லாய்ஸ்’. இந்தியாவில் முதல் சர்க்கஸ் 1880–ம் ஆண்டு தொடங்கியது. இதை மராட்டிய மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குர்துவாடி சமஸ்தான ராஜாவின் குதிரை லாயத்தில் தலைமை பொறுப்பில் இருந்த விஷ்ணுபந்த் சாத்ரே என்பவர் தொடங்கினார். அவரும், அவரது மனைவியும் சேர்ந்து 1980–ம் ஆண்டு கிரேட் இந்தியன் சர்க்கஸ் என்ற சர்க்கசை முதன்முதலாக தொடங்கினார்கள். அந்த சர்க்கஸ் கேரளாவில் உள்ள தலைச்சேரிக்கு சென்றபோது, அங்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கிளெரி குன்னிகண்ணன் என்பவரை சந்தித்து, தன் சர்க்கசில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு பயிற்சி அளிக்கச் சொன்னார். அதன் தொடர்ச்சியாகத்தான் 1901–ம் ஆண்டு குன்னிகண்ணன் கொல்லம் அருகே சிரக்காரா என்ற ஊரில் சர்க்கஸ் பள்ளிக்கூடத்தை தொடங்கி, இந்தியாவில் இன்று இந்திய சர்க்கஸ்களுக்கெல்லாம் பிதாமகனாக அழைக்கப்படுகிறார்.

நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சர்க்கஸ் தொழில், கடந்த 2011–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டப்படி சர்க்கசில் சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு, கரடி, காளைமாடுகள் போன்றவை தடை செய்யப்பட்டது. அதிலேயே சர்க்கஸ் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு சின்னச்சின்ன சர்க்கஸ் கம்பெனிகளெல்லாம் மூடப்பட்டன. இப்போது, மேலும் ஒரு விதி கொண்டு வரப்படுகிறது. இதன்படி குதிரை, நீர்யானை, யானைகள், ஏன் நாய்கள்கூட இருக்கக்கூடாது என்று தடை விதிக்க முயற்சிகள் நடக்கிறது. இதுகுறித்து ஆட்சேபனைகளும், கருத்துகளும் கேட்கப்பட இருக்கிறது. இந்த விதி பிறப்பிக்கப்பட்டால் சர்க்கசில் ஒரு மிருகம்கூட இருக்காது. இது நிச்சயமாக சர்க்கஸ் தொழிலை அடியோடு மூடவைத்துவிடும். இளம் மனது புத்துணர்ச்சி பெறவும், மேம்படவும் சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும். விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என்றால் அந்த விலங்குகளையெல்லாம் சர்க்கசில் உள்ளவர்கள் என்ன செய்யமுடியும். இந்த விலங்குகள் எல்லாம் வித்தைகாட்டியே பழக்கப்பட்டவை. அதை வீட்டில் வளர்க்கவும் முடியாது. மிருகக்காட்சி சாலைகளில் வைத்தும் பயனில்லை. சர்க்கசில் யானை ஆடி அசைந்து தேர்போலச் சுற்றி சுற்றி நடந்து வந்து பந்து விளையாடுவது, வித்தைகள் காட்டுவது என்று பல சாகச செயல்களை செய்யும்போது, பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் விழுந்த முதியவர்கள் வரை அத்தனைபேர் கவனமும் அதன் மேல்தான் குவியும். விலங்குகள் சர்க்கசில் பல்வேறு செயல்களை செய்து காட்டும்போது குழந்தைகள் குதூகலிப்பதும், சிறுவர்கள் மகிழ்வதும், பெரியவர்கள் கண் இசைக்காமல் பார்த்து மகிழ்வதும் இயல்பாக நடக்கும். தொய்வுற்ற மனங்களை இழுத்துக் கட்டும் சாதனமாக இருந்தது சர்க்கஸ். எனவே, சர்க்கஸ் தொழில் நலிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கும் மத்திய அரசு, இந்த முடிவை நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Next Story