42 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3 ஆயிரம் போதுமா?


42 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.3 ஆயிரம் போதுமா?
x
தினத்தந்தி 8 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-08T19:26:32+05:30)

இளமையில் எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும், தேவைக்கேற்ப சம்பாதித்தாலும் முதிர்வயதில் உழைக்க முடியாத நிலையில் வாழ்க்கை நடத்த தேவையான பணம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அந்த வயதில்தான் மருத்துவச்செலவு உள்பட பல செலவுகள் அதிகமாக இருக்கும்.

அரசாங்க வேலைகளை எடுத்துக்கொண்டால், 58 வயது அல்லது 60 வயதுவரை மாதசம்பளம் இருக்கும். ஓய்வுபெறும் நிலையில் பணிக்கொடையும் கொடுப்பார்கள். அதற்குப் பிறகு மாதம் மாதம் பென்‌ஷனும் கிடைக்கும். மற்ற தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் தங்கள் செலவுகளுக்கு போக சேமித்து வைக்கும் பணத்தை பல சேமிப்புகளில் போட்டு ஓரளவு சமாளித்துக் கொள்வார்கள். ஆனால், உடல் உழைப்பையே நம்பி தினக்கூலிகளாக மற்றும் குறைந்த ஊதியத்திற்கு வயிற்று பிழைப்புக்காக வேலை பார்ப்பவர்கள் முதிர் வயதில் எந்தவித வருமானமும் இல்லாமல், பசிபட்டினி யால் வாடும் நிலைமை இருக்கிறது. இவர்களுக்கு உதவும்வகையில் ஒரு பென்‌ஷன் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ளார். 

‘பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கான மாதாந்திர ஓய்வு ஊதிய திட்டம்’ என்று அழைக்கப்படும் இந்த முதுமைகால சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரிக்ஷா, ஆட்டோ ஓட்டுனர்கள், தெரு வியாபாரிகள், மதிய உணவுத்திட்ட ஊழியர்கள், பாரம் சுமப்பவர்கள், செங்கல் சூளை, விவசாயம், கட்டுமானம், செருப்பு தைத்தல், வீட்டுவேலை, கைத்தறி நெசவு, தோல் மற்றும் தையல், சலவை, ஒளி–ஒலி அமைப்பு மற்றும் இதுபோன்ற தொழிலா ளர்கள் அனைவரும் பலன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் என்னவென்றால், அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கவேண்டும். 18 வயது முதல் 40 வயது உடையவர் களாக இருக்கவேண்டும். வருங்கால வைப்புநிதி, தேசிய ஓய்வூதிய திட்டம், தொழிலாளர்கள் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது. மாதவருமானம் ரூ.15 ஆயிரம்வரை இருக்கலாம். பொதுசேவை மையங்களில் ஆதார் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள் மூலம் முதல்மாத சந்தாவாக செலுத்திக்கொள்ளலாம். 2–வது மாதம் முதல் சந்தா தொகை வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துச்செல்லப்படும். 

18 வயதில் ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.55 சந்தா தொகையாக கட்டவேண்டும். மத்தியஅரசாங்கத்தின் மாதாந்திர பங்களிப்பு தொகையாக 55 ரூபாய் இதில் சேர்க்கப்படும். 

60 வயதில் ஓய்வுபெற்ற பிறகு, மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வு ஊதியமாக பெறமுடியும். இதுபோல, ஒவ்வொரு வயதிற்கும் கட்டவேண்டிய மாதத்தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதற்கு இணையான தொகையை மத்தியஅரசாங்கம் கொடுக்கும். நிச்சயமாக இதெல்லாம் வரவேற்கத்தகுந்தது. ஆனால் 18 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்பவர் 42 ஆண்டுகளுக்குப்பிறகு மாதம் ரூ.3 ஆயிரம் பெறுவார் என்பது சற்று ஏற்புடையதாக இல்லை. அத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் மதிப்பு எவ்வளவாக இருக்கும். விலைவாசி எவ்வளவு இருக்கும் என்றெல்லாம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பணமதிப்பையும், விலைவாசி யையும் தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, நிச்சயமாக ரூ.3 ஆயிரம் என்பது மிகமிக சொற்பமான தொகையாகத்தான் அப்போது இருக்கும். நிச்சயமாக பல ஆண்டுகளுக்குப்பிறகு ரூ.3 ஆயிரம் என்பது வாழ்க்கை நடத்த போதவே போதாது. எனவே, அவ்வப்போது இருக்கும் பணமதிப்பு, விலைவாசிக்கேற்ப இந்தமாத ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

Next Story