வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி


வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி
x
தினத்தந்தி 3 April 2019 10:30 PM GMT (Updated: 3 April 2019 3:06 PM GMT)

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்தமுறை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானி 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் மத்திய மந்திரியாகி விட்டார். ஆனால், 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல்காந்தியின் வாக்குவித்தியாசத்தை 1 லட்சமாக குறைத்து விட்டார் என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று நோக்குகிறார்கள். இந்தத்தேர்தலிலும் ஸ்மிரிதிஇரானியே அவரை எதிர்த்து போட்டிபோடுகிறார். இந்தநிலையில், அமேதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, தமிழ்நாடு, கர்நாடகம் எல்லைக்கு அருகில் இருக்கும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இது எல்லோருக்குமே பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ராகுல்காந்தி கர்நாடகத்திலிருந்தும், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் போட்டியிட வேண்டும் என்று அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தமட்டில், ராகுல்காந்தியின் பாட்டி இந்திராகாந்தி சிக்மகளூரிலும், அவரது தாயார் சோனியாகாந்தி பெல்லாரியிலும் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆக, பாட்டி, தாயார் வழியில் ராகுல்காந்தியும் தென்மாநிலத்தில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட எடுத்திருக்கும் முடிவு, கம்யூனிஸ்டு கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் உறுதிப்பாட்டுக்கு, கேரளாவில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பாக போட்டிக்களத்தில் இறங்கியுள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் கேள்விக்கணைகளை எழுப்பியுள்ளன. கண்டிப்பாக கேரளாவில் இடதுசாரி கட்சிகள் ராகுல்காந்தியையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் எதிர்த்து போட்டியிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுசெயலாளர் பிரகாஷ்கரத் கூறியிருக்கிறார். கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் நிலையில், கேரளாவில் மட்டும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்.

அரசியல் கட்சித்தலைவர்கள் இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது புதிதல்ல. 1957-ல் முதன் முதலில் வாஜ்பாய் பாரதீய ஜனசங்கம் சார்பில் உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர், மதுரா, லக்னோவில் போட்டியிட்டு பல்ராம்பூரில் வெற்றிபெற்றார். 1980-ல் இந்திராகாந்தி தற்போது தெலுங்கானாவில் இருக்கும் மேடக் தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். 1991-ல் வாஜ்பாய் விடிஷா, லக்னோ ஆகிய 2 தொகுதிகளிலும், அத்வானி புதுடெல்லி, காந்திநகர் ஆகிய இரு தொகுதிகளிலும், 1999-ல் சோனியாகாந்தி பெல்லாரி, அமேதி ஆகிய 2 தொகுதிகளிலும், 2009-ல் லாலுபிரசாத் யாதவும், 2014-ல் முலாயம்சிங் யாதவும் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் வதோதரா, வாரணாசி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆக, ஒரு அரசியல் கட்சி தலைவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது புதிதல்ல. ஆனால், நாடாளுமன்ற விதியின்படி, ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே உறுப்பினராக செயல்படமுடியும். இதனால் ஒருதொகுதியை ராஜினாமா செய்து விடுகிறார்கள். அதுபோல ராகுல்காந்தியும் அமேதி, வயநாடு இரு தொகுதிகளில் வெற்றிபெற்றாலும், வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவே நீடிக்கவேண்டும் என்பதுதான் தென்மாநில மக்களின் விருப்பமாகும். அகில இந்திய தலைவர்கள் வடக்கே மட்டும் நின்று வெற்றி பெறுவதுபோல தென்மாநிலங்களிலும் போட்டியிட வரவேண்டும். 

Next Story