திசைமாறி போகும் பிரசாரம்


திசைமாறி போகும் பிரசாரம்
x
தினத்தந்தி 14 May 2019 11:30 PM GMT (Updated: 14 May 2019 3:44 PM GMT)

17–வது நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்டம் நெருங்கி விட்டது. இந்த தேர்தல் பிரசாரத்தில் ஆரம்பகாலத்தில் தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல் பிரசாரம் தென்றலாக இருந்தது. ஆனால், இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க எல்லாமே எல்லை மீறி போய்விட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது. கொள்கைப்போர், கருத்து மோதல்கள் என்ற எல்லையெல்லாம் தாண்டி முதலில் தனிப்பட்ட தாக்குதலில் தொடங்கி, இப்போது மதரீதியான கருத்துகள் உலாவர தொடங்கி விட்டன. இப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பேச்சும், காங்கிரஸ் தலைவர் சாம்பிட்ரோடாவின் பேச்சும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளன. 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்யும்போது, கமல்ஹாசன், ‘‘இந்து தீவிரவாதிகள் என்று சொல்லி விட்டேன் என்று கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக்கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமிழகத்திலிருந்து தைரியமாக வெளிவந்த குரல் எது? என்று இங்கிருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தெரியும். அப்போது, பா.ஜ.க. என்பது இளம் கட்சி. அப்போதே நான் அதை எதிர்த்தேன். நான் என் தேசிய கொடியை மதிக்கிறேன். அதில் உள்ள மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஒரு வர்ணமே கொடியை நிரப்பக்கூடாது. அது எந்த வர்ணமாக இருந்தாலும் சரி’’ என்று பேசியது, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசனின் பேச்சு பா.ஜ.க. மத்தியிலும், இந்து அமைப்புகள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல், அஸ்வினி குமார் உபாத்யாயா, ‘‘இந்திய தேர்தல் கமி‌ஷனில் கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும், அவர் பேசிய பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் மீறலாக கருதப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். 

மற்றவர்கள் எல்லாம் இதை அரசியல் ரீதியாக நோக்கினாலும் நடிகர் விவேக் ஓபராய் கூறிய கருத்து மட்டும் சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கிறது. ‘‘அன்புள்ள கமல் சார், நீங்கள் ஒரு பெரிய நடிகர். எப்படி கலைக்கு மதம் இல்லையோ, அதுபோல பயங்கரவாதத்துக்கும் மதம் இல்லை. நீங்கள் கோட்சேயை ஒரு பயங்கரவாதி என்று சொல்லலாம். ஏன் இந்து என்று குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் இருந்த காரணத்தால் ஓட்டு வாங்குவதற்காக அப்படி சொன்னீர்களா? ப்ளீஸ் சார், ஒரு சிறிய நடிகர், பெரிய நடிகருக்கு சொல்வது, இந்த நாட்டை நாம் பிரிக்க வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றுதான். ஜெய்ஹிந்த்’’ என்று கூறியிருக்கிறார். இதுதான் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நல்ல பதிலாக தெரிகிறது. மொத்தத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மிகத்தெளிவாக கூறியிருக்கிறது. மதம் அல்லது சாதி ரீதியாக பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் வகையிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் எந்தவொரு நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிற நிலையில், எல்லோருமே அந்தக்கோட்டைத்தாண்டி செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினரின் ஓட்டுகளை வாங்குவதற்காக மற்றொரு மதத்தை தாக்கினால் தான் முடியும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது.

Next Story