பொருளாதார சரிவு


பொருளாதார  சரிவு
x
தினத்தந்தி 2 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-02T22:46:57+05:30)

இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் டேவிட் கேமரூன். சிறந்த பொருளாதார நிபுணரான அவர், பிரெக்சிட் பிரச்சினை காரணமாக பதவியில் இருந்து விலக வேண்டியநிலை ஏற்பட்டது.

ங்கிலாந்து பிரதமராக இருந்தவர் டேவிட் கேமரூன். சிறந்த பொருளாதார நிபுணரான அவர், பிரெக்சிட் பிரச்சினை காரணமாக பதவியில் இருந்து விலக வேண்டியநிலை ஏற்பட்டது. அவர் பொருளாதாரம் பற்றி கூறிய கருத்துகள் யதார்த்த நிலையை காட்டுவதாகும். ‘‘எல்லாவற்றுக்குமே பொருளாதாரம்தான் முதலும், முடிவும் ஆகும். வலுவான பொருளாதாரம் இல்லையென்றால் வெற்றிகரமான கல்வி சீர்திருத்தத்தையோ மற்றும் வேறு எந்த சீர்திருத்தத்தையோ கொண்டு வரமுடியாது’’ என்று அவர் கூறினார். அத்தகைய ஒரு சூழ்நிலையைத்தான் இந்தியா இப்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. இப்போது நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் முதலில் பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம், உற்பத்தி பின்னடைவு ஆகிய கடும் சவால்களை சந்திக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி கடந்த 20 காலாண்டுகளில் இல்லாத  அளவு  பெரும்சரிவைக் காணும் நிலையில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. அவ்வளவு ஏன்?. கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி முடிவடைந்த காலாண்டில் 6.6 சதவீதமாக இருந்தது. மொத்தத்தில், கடந்த நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2018–19–ல் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்தங்கியுள்ளது. சீனாவைவிட பொருளாதார வளர்ச்சியில் வேகத்தை கண்டுள்ளோம் என்று மார்தட்டிக்கொண்டிருந்த நேரத்தில் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படுவது கவலையளிக்கத்தக்கதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியில்தான் பின்தங்குகிறோம் என்றால், வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு மிகவும் கவலையளிக்கத்தக்கதாக இருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வேலை பார்க்கக்கூடிய   தகுதியுள்ள   தொழிலாளர்களில்       6.1 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் 7.8 சதவீத இளைஞர்களும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதம்பேரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் எடுத்துக்கொண்டால், ஆண்களில் வேலையில்லாதோர் 6.2 சதவீதமும், பெண்களில் 5.7 சதவீதமும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

தொழில் உற்பத்தியும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த ஆய்வுகளின்படி பின்னடைவில் இருக்கிறது. அரசின் வருமானத்துக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசமான நிதிப்பற்றாக்குறை 3.39 சதவீதமாக இருக்கிறது. பொதுவாக தொழில் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமென்றால், வாங்கும் சக்தியை பொதுமக்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும். தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை அதிகரிக்க தொழில் நிறுவனங்களுக்கும் நிறைய சலுகைகளை வழங்கவேண்டும். கட்டுமான தொழில் நிறைய வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழிலாகும். சிமெண்டுக்கு இப்போதுள்ள 28 சதவீத சரக்கு சேவைவரியை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையை கட்டுமான தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளது. சரக்கு சேவைவரி நடைமுறைகளையும் எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. வர்த்தகத்தை பெரிதும் பாதிப்பதால் பண பரிவர்த்தனைகளுக்குள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும். அன்னிய முதலீடுகளுக்கும் சலுகையும் அளித்தால், நிறைய முதலீடுகளையும் ஈர்க்கமுடியும். உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். நிதி மந்திரி பொறுப்பை ஏற்கனவே நன்கு தெரிந்தவர், அனுபவம் கொண்டவர் என்பதால், இந்த சவால்களையெல்லாம் நிர்மலா சீதாராமன் வெற்றிகரமாக சமாளிப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜூலை 5–ந் தேதி அவர் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் இதையெல்லாம் சரிசெய்யும் முயற்சிகளை நாடு எதிர்பார்க்கிறது.

Next Story