கொஞ்சம்தான் குறைப்பு; ஆனாலும் வலிக்கிறது


கொஞ்சம்தான் குறைப்பு; ஆனாலும் வலிக்கிறது
x
தினத்தந்தி 8 July 2019 10:00 PM GMT (Updated: 8 July 2019 1:20 PM GMT)

தபால் அலுவலக டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி கிடைக்கிறது என்ற வகையில் பொதுமக்கள் அதிக அளவில் தபால் அலுவலகங்களிலேயே சேமிக்கத் தொடங்கினார்கள்.

கூட்டுவட்டி என்பது இந்த உலகத்தில் எட்டாவது அதிசயமாகும். இதை நன்கு புரிந்துகொண்டவர்கள்தான் சேமிப்புகள் மூலம் சம்பாதிப்பார்கள். அதை புரிந்துகொள்ளாதவர்கள் சேமிக்காமல் பணத்தை இழப்பார்கள் என்று கூறினார் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஆனால், தமிழ்நாட்டில்  காலம்காலமாக ‘சிக்கனமாக வாழணும், சேர்த்து வைக்க பழகணும்’ என்ற அறிவுரை மொழி பெரியவர்களால், இளைய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. அதை பின்பற்றிதான் மனிதகுலமும் தன் வாழ்வில் சம்பாதிக்கும் காலங்களில் ஓய்வுகாலத்துக்கு, பிள்ளைகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, தாங்கள் நோய்வாய் பட்டால் அதற்குரிய செலவை சமாளிப்பதற்கு, வீடு வாங்குவதற்கு, சொத்துகள் வாங்குவதற்கு என்று பல்வேறு நோக்கங்களுக்காக சேமித்து வைக்க தொடங்கினார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் தங்கள் சேமிப்புகளை தங்கம் வாங்குவதிலும், ரியல் எஸ்டேட்டிலும்தான் அதிக அளவில் முதலீடு செய்தனர். இந்த வகையிலான முதலீடு 68 சதவீதமாகவும், டெபாசிட்டுகள், லைப் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் சேமிப்பவர்கள் 32 சதவீதமாகவும் இருந்தது.

இப்போது வங்கி டெபாசிட்டுகளைவிட, தபால் அலுவலக டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி கிடைக்கிறது என்ற வகையில் பொதுமக்கள் அதிக அளவில் தபால் அலுவலகங்களிலேயே சேமிக்கத் தொடங்கினார்கள். ஷியாமளா கோபிநாத் குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஒவ்வொரு காலாண்டிலும் இந்த தபால் அலுவலக டெபாசிட்டுகளின் வட்டி விகிதங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு ஏற்றத்தையோ, இறக்கத்தையோ காணுகின்றன. அந்தவகையில்  ஜூலை 1–ந்தேதி முதல் செப்டம்பர் 3–ந் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கான தபால் அலுவலக சேமிப்பு டெபாசிட்டுகளின் வட்டி விகிதம் .1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 2015–16–ல் மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 9.3 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது 8.6 சதவீதம்தான் இருக்கிறது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி அப்போது 9.2 சதவீதமாக இருந்தது, இப்போது 8.4 சதவீதமாக இருக்கிறது. பி.பி.எப். என்று கூறப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி அப்போது 8.7 சதவீதமாக இருந்தது, இப்போது 7.9 சதவீதமாக இருக்கிறது. 5 ஆண்டு தொடர் வைப்பு நிதிக்கு அப்போது 8.4 சதவீதமாக இருந்தது, இப்போது 7.2 சதவீதமாக இருக்கிறது. மற்ற சேமிப்புகளுக்கும் .1 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

இப்படி கடந்த 3 ஆண்டுகளில் தபால் அலுவலக சேமிப்புகள் அனைத்தும் பெரும் சரிவைக்கண்டிருக்கிறது. இப்படி வட்டியை குறைப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இப்போது மிகவும் அதிகமாகிவிட்டது. இப்போது .1 சதவீதம் குறைப்பு என்பது கொஞ்சம்தான் என்றாலும், இது தபால் அலுவலகங்களில் சேமித்துவைத்து, அதன் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு மிகப்பெரிய வலியாகும். எனவே, மக்களின் பார்வை அதிக வட்டி கொடுக்கும் போலி நிதி நிறுவனங்கள் பக்கம் போகாமல் இருக்க வேண்டுமென்றால், தபால் அலுவலக சேமிப்பு வட்டியை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குறைக்காமல் இருப்பதே நல்லது. பென்சன் இல்லாத, அரசு பணியில் இல்லாத மக்கள் சம்பாதிக்கும் காலத்தில் தபால் அலுவலகங்களில் சேமித்துத்தான், ஓய்வுகாலத்தில் அதிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்து வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தாங்கமுடியாத இழப்பை கொடுத்துவிடக்கூடாது. உயர்ந்துவரும் விலைவாசியில் அவர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் நிச்சயமாக துண்டு விழும்.

Next Story