சரிந்து வரும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை


சரிந்து வரும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 29 July 2019 10:00 PM GMT (Updated: 2019-07-29T21:07:51+05:30)

1980–ல் தமிழ்நாட்டில் என்ஜினீயர்களுக்கு கடும் கிராக்கி இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படிக்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில், படித்து முடித்தவுடனேயே வேலை என்ற நிலை இருந்தது. தமிழக மாணவர்களுக்கு தமிழ் நாட்டிலேயே படிக்க வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிறைய சுயநிதி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தொடர்ந்து நடத்த முடியாமல் பல கல்லூரிகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைப் பார்த்தால் மிகவும் கவலை அளிக்கத்தக்க வகையில் இருக்கிறது. மொத்தம் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1,67,101 இடங்கள் இருக்கின்றன. 479 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட நிலையில், இதில் பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவடைந்துவிட்டது. 76,364 இடங்களிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 90,737 இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்த இடங்களில் 46 சதவீத இடங்களிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 54 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. 16 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை. கடந்த 4 ஆண்டுகளாகவே 200–க்கும் மேற்பட்ட கல்லூரிகளால் 30 சதவீத இடங்களைக்கூட நிரப்ப முடியவில்லை. 82 கல்லூரிகளில் இந்த ஆண்டு 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த 2 ஆண்டுகள் எந்த புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்படமாட்டாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் டி சஹஸ்ர புத்தே அறிவித்திருப்பது மிக சரியான நடவடிக்கையாகும். தொடர்ந்து பல கல்லூரிகளால் இயங்க முடியாமல் மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏராளமான ஆசிரியர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். நிச்சயமாக இது நல்ல சூழ்நிலை அல்ல. உடனடியாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

சுயநிதி கல்லூரிகளும் பெரும் பொருட்செலவில் அரசின் மானியமின்றி தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. மாணவர்களும் என்ஜினீயரிங் படிக்கவேண்டும். அவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைத்தால்தான் படிக்க முன்வருவார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும், இப்போதுள்ள தொழிற்சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படவேண்டும். அந்தவகையில் தொழில்கள் வளர அரசு இன்னும் பல ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கவேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஏராளமாக உருவாகவேண்டும். என்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கும் உடனடி வேலைவாய்ப்பு ஒருபுறம் வழங்கினாலும், அவர்களே சிறு சிறு தொழில்களை தொடங்க ஊக்கமும், வழிகாட்டுதலும், மானியங்களும் வழங்கவேண்டும். தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றால், அவர்கள் எதிர்பார்க்கும் திறமை மாணவர்களுக்கு இருக்கவேண்டும். அந்த அளவு தரம் இப்போது இல்லை. அந்த வகையில் மாணவர்களின் கல்வித்தரம் உலகளாவிய தரத்தில் இருக்கவேண்டும். கல்வித்தரம் உயர வேண்டுமென்றால், அண்ணா பல்கலைக்கழகமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், என்ஜினீயரிங் கல்லூரிகளும் உடனடியாக முழுவீச்சில் இறங்கவேண்டும். தமிழக அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். என்ஜினீயரிங் படித்தால் உடனடி வேலை என்ற நிலை மீண்டும் உருவாகவேண்டும். அதுதான் மாணவர்களுக்கும் நல்லது, கல்லூரிகளுக்கும் நல்லது, தமிழக அரசுக்கும் நல்லது, ஏன் தமிழ்நாட்டுக்கும் நல்லது. 

Next Story