வேண்டாம் இன்னொரு பண மதிப்பிழப்பு


வேண்டாம் இன்னொரு பண மதிப்பிழப்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 3:06 PM GMT)

வேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்த பங்கை ஆற்றியது முதலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அடுத்து சரக்கு சேவைவரி என்பதும்தான் என்று பரவலான கருத்தாக இருக்கிறது.

2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி இரவில் டெலிவி‌ஷனில் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல், பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர், ‘ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என ஆகிவிடுகிறது’ என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. ஆனால், வங்கிக்கு திரும்ப வந்தது ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். ஒரு சதவீத நோட்டுகள்தான் திரும்பவரவில்லை. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசிவடைந்தன. சில்லரை வியாபாரங்கள் படுத்துவிட்டன. விவசாயமும் பெரிதும் பாதிப்படைந்தது. ஏனெனில், இவையெல்லாம் பணப்புழக்கத்தை வைத்தே நடைபெறும் தொழில்கள் ஆகும். தற்போது 2,000 ரூபாய் நோட்டுகள் தொழில் நடத்துவோருக்கும், வியாபாரம் செய்வோருக்கும், பொதுமக்கள் செலவழிப்பதற்கும் பெரிதும் வசதியாக இருக்கிறது. 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான 329 கோடியே 10 லட்ச எண்ணிக்கையில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அடிக்கடி 2,000 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவிக்கப்போகிறார்கள் என்ற தகவல்கள் 2017–ம் ஆண்டில் இருந்தே பரவி வருகிறது. அரசு அவ்வப்போது இதை மறுத்து வருகிறது. 

அதே நேரம், 2016–17–ம் ஆண்டு முதல் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடுவது வெகுவாக குறைந்து வருகிறது. அரசே 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ரூ.5 கோடிக்குமேல் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணங்களில் 2017–18–ல் 67.19 சதவீதமாகவும், 2018–19–ல் 65.93 சதவீதமாகவும், 2018–19 முதல் இன்று வரை 43.22 சதவீதமாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது குறைந்து வருகிறது. தொடர்ந்து மத்திய மந்திரிகள் பேச்சும், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து பெரும்பாலும் குறைந்து வருவதை பார்க்கும்போது, எங்கே மீண்டும் பண மதிப்பிழப்பு அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வரப்போகிறதோ என்ற பெரிய ஐயத்தை உருவாக்கியுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து குறைந்து வருவதால், அது கருப்பு பணமாக மறைக்கப்படுகிறது என்றோ, பதுக்கப்படுகிறது என்றோ சொல்லமுடியாது. பொதுமக்கள் சேமிப்பதற்கும், விவசாயிகள் தங்கள் அவசர செலவுகளை மேற்கொள்வதற்காகவும், வியாபாரிகள் விளைச்சல் நேரங்களில் கொள்முதல் செய்வதற்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். மேலும், இன்றைய காலகட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய்க்கு பெரிய மதிப்பே இல்லை. பணம் பதுக்குகிறார்கள், கருப்பு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை தடைசெய்தால், நாளையே 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?. இப்படி முதலில் 2,000, பிறகு 500, அதன்பிறகு 200, அதற்குப்பிறகு 100 ரூபாய் நோட்டுகள் என்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்ந்தால், மக்களுக்கு பணத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விடும். அது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது அல்ல.

Next Story