எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!


எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல!
x
தினத்தந்தி 27 Jan 2020 9:30 PM GMT (Updated: 27 Jan 2020 7:29 PM GMT)

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக மக்களே அரசாங்கத்தை நடத்துவதுதான். அந்த வகையில், இந்தியா உலகிலேயே மிகச்சிறந்த ஜனநாயக நாடாக கருதப்படுகிறது.

இங்கு ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றின் உறுப்பினர்கள், தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எல்லோருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையமும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையமும் நடத்துகின்றன.

இந்திய தேர்தல் ஆணையம் 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி அமைக்கப்பட்டது. அந்த நாளை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய வாக்காளர் தினவிழாவில் தேர்தல் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பணிகளில், தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக கையாண்டதற்காக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வி.சாந்தா ஆகியோருக்கு கேடயங்களை வழங்கிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சிந்திக்க வைத்துள்ளது. அவர் பேசும்போது, ‘அவரது அரசியல் வாழ்க்கையில் 9 தேர்தல்களை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இன்று தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேசுகிறோம். ஆனால், பெரிய சீர்திருத்தத்தை செய்தது கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடுத்த ஒரு வழக்கினால் கிடைத்த தீர்ப்புதான். தேர்தலில் வேட்பாளர்கள் செய்யும் செலவும், அந்த வேட்பாளருக்காக கட்சி சார்பில் செலவிடப்படும் செலவும், ஒன்றாகவே சேர்த்து கணக்கில் காட்டப்படவேண்டும் என்று அவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு இந்த இரு செலவுகளையும் சேர்த்து உச்சவரம்பு தொகையை தாண்டக்கூடாது என்று உத்தரவிட்டதுதான் இன்றும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய சீர்திருத்தத்தை செய்த கவர்னர், இந்த விழாவில், “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்கவேண்டும். இது நாட்டுக்கு செய்யும் சேவை. ஓட்டுக்காக பணம் தருவதற்காக வீடுகளுக்கு வரும் அரசியல் கட்சிகளை மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது. அது சட்டவிரோத பணம். அதை தடுத்து நிறுத்தவேண்டும். எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கவேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல, வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தானதாகும். தேர்தலில் வாக்களிப்பது என்பது உரிமை. அந்த உரிமையை பணத்துக்கு விற்றுவிட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கேள்விகேட்கும் உரிமையை, கோரிக்கை விடுக்கும் உரிமையை, இதை எங்களுக்கு செய்துதரவேண்டும் என்று கட்டளைபிறப்பிக்கும் உரிமையை வாக்காளர்கள் இழந்துவிடுகிறார்கள். சில 100 ரூபாய்களையோ அல்லது 1,000 ரூபாயையோ வாங்கிவிட்டு ஒருவருக்கு ஓட்டு அளித்தால், அவரும் வெற்றிபெற்று அதன்பிறகு மக்கள் சேவையை பின்னுக்கு தள்ளிவிட்டு, தான் தேர்தலில் செலவழித்த பணத்தை சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதிலும், மக்களுக்கான சேவைகளை ஆற்றுவதிலும் கமிஷன் பார்த்துத்தான் எந்த வேலையையும் செய்யவேண்டிய கட்டாயம், நிர்ப்பந்தம் ஏற்படலாம். பணம் கொடுத்துத்தான் தேர்தலில் ஜெயிக்கமுடியும் என்றநிலை ஏற்பட்டால், பண வசதி இல்லாத, நேர்மையான, மக்கள் தொண்டாற்றவேண்டும் என்ற உணர்வில் இருக்கும் அரசியல் கட்சி வேட்பாளர்களோ, சுயேச்சைகளோ நிச்சயமாக தேர்தலில் நிற்கமுடியாது. எப்படி லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று இருக்கிறதோ, அதுபோல ஓட்டுக்காக பணம் கொடுப்பது மட்டும் குற்றமல்ல, பணம் வாங்குவதும் குற்றமே. 5 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்ற ஒரு பிரதிநிதியை பணம் வாங்காமல், அவர்களை நேர்மை, தகுதியின் அடிப்படையில் மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்தால் ஜனநாயகம் தழைக்கும். மக்களுக்கும் எல்லா நன்மைகளும் அபரிமிதமாக கிடைக்கும்.

Next Story