காங்கிரசிடம் இருந்து தட்டிப்பறித்த பா.ஜ.க.


காங்கிரசிடம் இருந்து தட்டிப்பறித்த பா.ஜ.க.
x
தினத்தந்தி 23 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-23T22:46:39+05:30)

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து, மத்திய அரசாங்கத்தை 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க. தன் கைவசப்படுத்தியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து, மத்திய அரசாங்கத்தை 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க. தன் கைவசப்படுத்தியது. தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பா.ஜ.க.வே தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமர் ஆனார். பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் சரிவைக்கண்ட நிலையில், “காங்கிரஸ் இல்லாத இந்தியா”வை உருவாக்குவதையே தனது லட்சியமாகக்கொண்டு பா.ஜ.க. மும்முரமாக செயல்பட்டது. மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து, கர்நாடக மாநிலத்தையும் கைப்பற்றியது. எங்களுக்கு மக்களிடம் செல்வாக்கு குறையவில்லை என்று கூறிய காங்கிரஸ், 2018-ம் ஆண்டு நடந்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று சற்று தெம்பானது. மத்தியபிரதேசத்தில் 15 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்துவந்தது. 13 ஆண்டுகளாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். மொத்தம் உள்ள 230 இடங்களில், காங்கிரஸ் 114 இடங்களிலும், பா.ஜ.க. 109 இடங்களிலும் வெற்றிபெற்றது. இரு கட்சிகளுக்குமே மெஜாரிட்டி இல்லாதநிலையில், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் 4 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.விலும் சரி, காங்கிரசிலும் சரி, அங்குள்ள குவாலியர் சமஸ்தான ராஜகுடும்பத்தின் செல்வாக்குதான் அதிகமாக இருக்கிறது. காங்கிரசில் ராஜகுடும்பத்தை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மிக செல்வாக்குடன் இருந்துவந்தார். இவர், ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பர். எந்தநேரத்திலும் ராகுல்காந்தியை வீட்டுக்குச்சென்று சந்திக்கும் உரிமைபடைத்தவர். அத்தகைய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, 2018-ம்ஆண்டு தனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கவில்லையே என்ற அதிருப்தியில் இருந்தார். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியுற்றவுடன், மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவராகவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுவும் நடக்கவில்லை. காங்கிரசில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தார். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை பா.ஜ.க. அரசு ரத்துசெய்த நேரத்தில், அதை அவர் ஆதரித்தார். அப்போது அவரது நிலைப்பாடு வெளிப்படையாகத்தெரிந்தது. இந்தநிலையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியா தன்னுடைய ஆதரவாளர்கள் 22 எம்.எல்.ஏ.க்களுடன் ராஜினாமா செய்தார். இதில் 6 மந்திரிகளும் அடங்குவார்கள். மின்னல்வேகத்தில் பா.ஜ.க.வில் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களையும், சமாதானப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தும் நடக்கவில்லை.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காங்கிரஸ் தன் சுயபலத்தை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நிச்சயமாக தோல்வி அடைந்துவிடுவோம் என்று நினைத்த முதல்-மந்திரி கமல்நாத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆக இனி பா.ஜ.க. அரசாங்கம்தான் மத்திய பிரதேச மாநிலத்தை ஆளப்போகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கவிழ்க்கும் வேலை இப்போது புதிதாக தொடங்கப்படவில்லை. 1970-80-ம் ஆண்டுகளில் காங்கிரஸ்தான் இதுபோல கட்சித்தாவல்களை ஊக்குவித்து பல காங்கிரஸ் இல்லாத அரசுகளை கவிழ்த்தது. இப்போது அதே அரசியல் விளையாட்டை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. இதுபோல ஒரு கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மற்றொரு கட்சிக்கு உறுப்பினர்கள் தாவிவிடக்கூடாது என்பதற்காகத்தான் கட்சித்தாவல் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒரு கட்சியில் இருந்து விலகி, மற்றொரு கட்சியில் சேருவதுதானே இந்த தடைச்சட்டம் தடுத்து நிறுத்துகிறது. நாங்கள் ராஜினாமா செய்துவிட்டோம், இப்ப என்ன செய்வீங்க?, இப்ப என்ன செய்வீங்க? என்று 22 எம்.எல்.ஏ.க்களும் கேட்கிறார்கள். மத்தியபிரதேசத்தை பொறுத்தமட்டில், பா.ஜ.க.வை முழுமையாகக் குறைசொல்ல முடியாது. தன் கூட்டுக்குள் உள்ள பறவைகளை தன் கட்டுக்குள் வைக்கமுடியாமல், வெளியே பறக்கவிடவைத்தது காங்கிரசின் தோல்விதானே தவிர, பா.ஜ.க.வை குற்றம்சொல்லி பலன் இல்லை.

Next Story