சகஜ வாழ்க்கை எப்போது திரும்பும்?


சகஜ வாழ்க்கை எப்போது திரும்பும்?
x
தினத்தந்தி 3 July 2020 10:30 PM GMT (Updated: 2020-07-03T22:03:10+05:30)

கடந்த மாதம் 29-ந்தேதி ஒரே நாளில் மத்திய அரசாங்கம் 2-வது ஊரடங்கு தளர்வையும், தமிழக அரசு 6-வது ஊரடங்கையும் அறிவித்தன.

டந்த மாதம் 29-ந்தேதி ஒரே நாளில் மத்திய அரசாங்கம் 2-வது ஊரடங்கு தளர்வையும், தமிழக அரசு 6-வது ஊரடங்கையும் அறிவித்தன. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், முதல் தளர்வை மே மாதம் 30-ந்தேதி அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போவதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. முதலில் தமிழ்நாட்டில், மார்ச் 25-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை 19 நாட்கள் 2-வது ஊரடங்கும், மே 4-ந்தேதி முதல் மே 17-ந்தேதி வரை 14 நாட்கள்

3-வது ஊரடங்கும், மே 18-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை 14 நாட்கள் 4-வது ஊரடங்கும், ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 30 நாட்கள் 5-ம் கட்ட ஊரடங்கும் அறிவிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த 5 கட்ட ஊரடங்கினால், 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முதல் ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25-ந்தேதி 8 பேருக்குத்தான் கொரோனா தொற்று இருந்தது. முதல் ஊரடங்கு முடிந்த மார்ச் 31-ந்தேதி 124 பேருக்கு தொற்று இருந்தது. ஒவ்வொரு ஊரடங்கு முடியும்போதும் கொரோனா தொற்று நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உயர்ந்து கொண்டே போனது. இப்போது 5-வது ஊரடங்கு முடிந்து, 6-வது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

5-வது ஊரடங்கு முடிந்த கடந்த மாதம் 30-ந்தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆனது. நேற்றைய தினம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக உயர்ந்தது. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் பரிசோதனை எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகளை பொறுத்தமட்டில், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, நிறைய பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுவார்கள், அதனால் அந்த எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள். ஒரு பக்கம் ஊரடங்கினால், பாதிப்புகளின் எண்ணிக்கை குறையாத நிலையில், மற்றொரு பக்கம் அனைத்து தொழில்களும் முடக்க நிலையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அண்டை மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் ‘இ-பாஸ்’ வாங்கிக்கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பதால், உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக அபயக்குரல் எழுப்புகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் தமிழக முதல்-அமைச்சர் மருத்துவக் குழு பரிந்துரையை ஏற்றுத்தான் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே வந்தார். ஆனால், 5வது ஊரடங்கு முடியும் தருவாயில், கடந்த மாதம் 29-ந்தேதி மருத்துவக் குழுவினர், ‘ஊரடங்கை நீட்டிக்க நாங்கள் பரிந்துரை செய்யவில்லை. ஊரடங்கு என்பது எப்போதுமே தீர்வு கிடையாது. எந்தெந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாகிறது என்று தெரிந்தால், அங்கு சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம். பெரிய கோடாரியை எடுத்து ஒரு கொசுவை கொல்வதைப்போலத்தான் ஊரடங்கை பயன்படுத்துவது. ஊரடங்கை இன்னும் 6 மாதம் நீட்டிப்பதால் பயன் இல்லை. வேறு யுக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். ஊரடங்குக்கு பதிலாக வேறு சில ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். ஊரடங்கினால் ஒரு பெரிய முடக்கநிலையை தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு மட்டுமே தீர்வு என்று இல்லாமல், வேறு எந்தெந்த முறைகளில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதை மருத்துவ நிபுணர்களோடு ஆலோசித்து, மக்களின் சகஜ வாழ்வு மற்றும் தொழில்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தகங்கள், அரசு அலுவலகங்களில் சகஜநிலை திரும்புவதற்கான வழிமுறைகளை அரசு ஆராய வேண்டும். ஊரடங்கு மட்டுமே ஆயுதம் இல்லை. வேறு ஆயுதங்களும் இருக்கின்றன. அதைக்கண்டறிய வேண்டும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story