வருமானவரி கட்டுபவர்களுக்கு கவுரவம்!


வருமானவரி கட்டுபவர்களுக்கு கவுரவம்!
x
தினத்தந்தி 16 Aug 2020 9:53 PM GMT (Updated: 16 Aug 2020 9:53 PM GMT)

பொதுவாக வருமானவரி வரம்புக்குள் வரும் நாம், நமது வருமானத்தை மறைக்காமல் அரசுக்கு வரி கட்டுகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்துவிட்டு, அதற்கான மதிப்பீடு முடியும்வரை நெஞ்சில் கலக்கத்துடனேயே காத்திருக்க வேண்டியநிலை இருக்கிறது.

பொதுவாக வருமானவரி வரம்புக்குள் வரும் நாம், நமது வருமானத்தை மறைக்காமல் அரசுக்கு வரி கட்டுகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்துவிட்டு, அதற்கான மதிப்பீடு முடியும்வரை நெஞ்சில் கலக்கத்துடனேயே காத்திருக்க வேண்டியநிலை இருக்கிறது. ஏதாவது நோட்டீசு வந்துவிடுமோ?, விசாரணைக்கு அழைப்பார்களோ? என்ற அச்சத்துடனேயே வருமானவரி கட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

அந்த நிலையை மாற்றும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி, சுதந்திரம் அடைந்து இவ்வளவு ஆண்டுகளாக அதிக மாற்றங்களை காணாத வருமான வரித்துறை செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் வகையில், “வெளிப்படையான வரி விதிப்பு-நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற சாசனத்தை வெளியிட்டுள்ளார். வரி கட்டுபவர்களுக்கு தாமதமில்லாமல், வலியில்லாமல், நியாயமான, கண்ணியமான, எளிமையான அணுகுமுறை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வரி கட்டுபவர்களை, வருமான வரித்துறையினர் ஒரு நேர்மையானவர்களாகவே பார்க்கவேண்டும். அவர்கள் ஏமாற்றிவிட்டார்களோ?, மோசடி செய்துவிட்டார்களோ? என்ற கோணத்தில் ஆராயக்கூடாது. அவர் நேர்மையாக வரி கட்டியிருக்கிறார் என்ற நம்பிக்கையுடனேயே அவருடைய வருமானவரி கணக்கை அணுகுதலும், ஆய்வு செய்தலும், சரிபார்த்தலும் வேண்டும் என்றவகையில், இந்த சாசனத்தில் வரி கட்டுபவர்களுக்கு இப்போதுள்ள கஷ்டங்களை தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

வருமானவரி சட்டங்கள் மக்களை மையமாக வைத்து, நட்புறவோடு செயல்படுத்தவேண்டுமே தவிர, அதிகாரத்தை மையமாக வைத்து அச்சுறுத்தும் பாணியில் இருக்கக்கடாது என்று நீண்டநாட்களாக மக்கள் விடுத்துவந்த கோரிக்கைகளுக்கு இன்று விடைகிடைத்துள்ளது. பிரதமர் இந்த சாசனத்தில், முதல்முறையாக முகமற்ற மதிப்பீடு முறை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று கூறியதை தொடர்ந்து, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் வரி செலுத்துவோர் யாருக்கும் அவரது மதிப்பீடு அதிகாரி யார்? என்று தெரியாது. ஒரு ஊரில் தாக்கல் செய்யப்படும் வருமானவரி கணக்கை, யார் மதிப்பீடு செய்யப்போகிறார்?, யார் ஆணை வழங்குவார்?. யார் மறுஆய்வு செய்வார்? என்பதை எல்லாம் இனி கம்ப்யூட்டரே முடிவு செய்யுமே தவிர, மேலதிகாரி முடிவு செய்யமாட்டார்.

அடுத்து வரவேற்கவேண்டிய முக்கிய அம்சம், வணிக நிறுவனங்களில், தொழில் நிறுவனங்களில் மதிப்பீடு அதிகாரி சர்வே செய்து வருமானத்தை கணக்கிடும் நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அப்படி பெரிய அளவில் வரிஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்தால், வருமான வரி புலனாய்வு பிரிவு மட்டுமே அந்த சர்வேயை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் தொழில் நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் எப்போது வருமான வரித்துறையில் இருந்து சர்வே வருமோ? என்ற அச்சம் விலகிவிட்டது. இனி நேர்மையாக வரி கட்டுபவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கும், வரி கட்டுவது எளிமையாக இருக்கும், சுகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமென்றால், பிரதமர் வெளியிட்டுள்ள இந்த சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எல்லாம் அப்படியே முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். அது எப்படி நிறைவேறப்போகிறது? என்பது வருமான வரித்துறை இனி மேற்கொள்ளப்போகும் நடைமுறைகளில்தான் தெளிவாகும்.

இது ஒருபுறம் இருக்க வருமான வரித்துறையினர் வீட்டு உபயோக மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், நகைகள், ஓவியங்கள், நன்கொடைகள் போன்ற 11 இனங்களில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவழித்தால் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அவர்கள் எல்லாம் கண்டிப்பாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவேண்டும் என்று பரிசீலிக்கும் திட்டம் இப்போதுள்ள விலைவாசியில் நிச்சயமாக ஏற்புடையதல்ல. ஒரு பவுன் நகை ரூ.40 ஆயிரத்திற்கு மேல் குதிரை பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கும்போது, 3 பவுன் நகை வாங்கினாலே வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவேண்டும் என்றநிலை ஏற்பட்டால், சாதாரண ஏழை-எளிய மக்கள்கூட வருமானவரி கணக்கு என்ற வலைக்குள் சிக்கித்தவிக்க வேண்டியது இருக்கும். எனவே, இந்த திட்டத்தை வருமான வரித்துறை நடைமுறைப்படுத்தக்கூடாது. 

Next Story