மீண்டெழும் தமிழகம்!


மீண்டெழும் தமிழகம்!
x
தினத்தந்தி 8 Sep 2020 9:02 PM GMT (Updated: 2020-09-09T02:32:17+05:30)

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் காலெடுத்து வைத்து இன்றளவும் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவால், தமிழகம் எல்லாத்துறைகளிலும் பெரிதும் பாதிப்படைந்திருந்தது.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் காலெடுத்து வைத்து இன்றளவும் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவால், தமிழகம் எல்லாத்துறைகளிலும் பெரிதும் பாதிப்படைந்திருந்தது. தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள் கொரோனாவுக்கு பயந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

தமிழக அரசின் சார்பிலும் 7 ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு, இப்போது 8-வது ஊரடங்கு அமலில் இருக்கிறது. எல்லா தொழிற்சாலைகளும் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் மூடப்பட்ட நிலையில், உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு, வர்த்தகமும் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதன்காரணமாக, உற்பத்தி பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், அதற்கும் மேலாக அரசுக்கு வரிவருவாயும் இந்த நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் 51 சதவீதம் குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் தொழில் பெரும் வீழ்ச்சியை அடைந்தது.

தொழில்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், விவசாயம் தமிழகம் முழுவதும் கைகொடுத்தது. இந்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால், விவசாயம் தமிழ்நாடு முழுவதும் உயிர்பெற்று எழுந்து சாகுபடி பரப்பு மிக அதிகமாக உயர்ந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், டெல்டா மாவட்டங்களில் 3,870 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,803 லட்சம் ஏக்கர்தான் சாகுபடி செய்யப்பட்டது. 30 ஆண்டுகால வரலாற்றில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட அதிகபட்ச பரப்பு இதுதான் என்று பெருமையோடு கூறுகிறார், வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி.

அரசு இதுவரை அறிவித்த தளர்வுகளால் தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கிவிட்டது என்றார், தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் 23.5 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் இருந்தநிலையில், தமிழ்நாட்டில் மிக அதிகமாக 49.8, 33 சதவீத அளவுகளில் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆகஸ்டு மாதத்தில் அகில இந்திய அளவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் 8.3 சதவீதம் என்றநிலை இருந்தும், தமிழ்நாட்டில் 2.6 சதவீதம்தான். ஆக, விவசாயத்தைபோல, தொழில்களிலும் தமிழ்நாடு மீண்டெழுந்துவிட்டது. கட்டிடத்தொழில் தலைதூக்கிவிட்டது. புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களில் வேலையில்லாமல் வறுமையில் வாடியநிலையில், தங்களுக்கு வாழ்வளித்த தமிழ்நாடுதான் சொர்க்க பூமி என்று தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கிவிட்டனர். அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களும் விமானம், பஸ்கள் மூலமாக அழைத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

அனைத்து மோட்டார் வாகன தொழிற்சாலைகளும் உற்பத்தியை தொடங்கிவிட்டன. தீபாவளி நெருங்குவதால் ஆடை தயாரிப்பு தொழில்கள், மின்னணு சாதன பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என்று எல்லா தொழில்களுமே உற்பத்தியை முழுவீச்சில் தொடங்கிவிட்டன. கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டதாலும், பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும் நிலையிலும் மற்றும் வேலைவாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் திறந்துவிட்டதாலும், இந்த மாதம் மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன்காரணமாக வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஆன்லைன் விற்பனை மிக அதிகளவில் பெருகிவிட்டது. ரியல் எஸ்டேட் தலைதூக்கிவிட்டது என்பதற்கு சான்று, 2019-ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் 2 லட்சத்து 649 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 70 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக, அரசுக்கு ரூ.792 கோடியே 65 லட்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் வருவாயாக கிடைத்துள்ளது என்கிறார், பதிவுத்துறை தலைவர் ஜோதிநிர்மலா சாமி. கொரோனா தாக்குதலின் காரணமாக அனைத்து தொழில்களும் சுருண்டுபோய் இருந்த நிலையில், இப்போது கொரோனா பரவல் இருந்தாலும், அது ஒருபக்கம் போகட்டும், நாம் வேறுபாதையில் அதாவது வளர்ச்சிப்பாதையில் செல்வோம் என்று வேளாண்மையும், தொழில்களும் மீண்டெழுந்து வேகமாக செல்லத்தொடங்கிவிட்டது, மகிழ்ச்சிக்குரியது.

Next Story