தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்குமா?


தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்குமா?
x
தினத்தந்தி 27 Sep 2020 9:30 PM GMT (Updated: 27 Sep 2020 6:23 PM GMT)

கொரோனா பரவல் மிகவேகமாக இருக்கிறது. ஆனால், அதற்காக எல்லாவற்றையுமே ஒரு முடக்க நிலையில் வைத்திருக்க முடியாது.

சுப்ரீம் கோர்ட்டு சொன்னதுபோல, வாழ்க்கை சக்கரமும் சுழல வேண்டும். அந்தவகையில், இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்துக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தலை அறிவித்துள்ளது. இதற்காக, ‘நீட்’ தேர்வு நடந்ததையும், ஜே.இ.இ. தேர்வு நடந்ததையும் முன்உதாரணமாக காட்டி, இந்த தேர்வுகளால் கொரோனா பரவல் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, பீகார் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது.

உலகில் பல நாடுகளில் கொரோனா காலத்தில் தேர்தல் நடந்துள்ளது. அதில், மிகப்பெரிய தேர்தல் இதுதான். 7 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள், 243 தொகுதிகளுக்கு வாக்களிக்கப்போகும் தேர்தல் இது. அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடக்கப்போகும் இந்த 3 கட்ட தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1,500 பேர் வாக்களிக்கலாம் என்ற நிலையை மாற்றி, 1,000 பேர் தான் வாக்களிக்க முடியும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது, 65,367 வாக்குச்சாவடிகள் இருந்தன. இப்போது அது, ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 526 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல் போன்ற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “இது ஆபத்தான முயற்சி அல்ல. நம்பிக்கையின் பாய்ச்சல். இருட்டுக்குள் நடக்கும் பாய்ச்சல் அல்ல” என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார் தேர்தலைபோல, 14 மாநிலங்களிலுள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டியது இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், குடியாத்தம், திருவொற்றியூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியது இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மே 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போதுள்ள சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து மே 25-ந்தேதிக்குள் அடுத்த சட்டசபை பதவியேற்றாக வேண்டும். அந்தவகையில், 2021-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டசபையின் பதவிக்காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காலியான தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த முடியும். அந்தவகையில், குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசின் சார்பில் தலைமைச்செயலாளர் க.சண்முகம் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நவம்பர் மாதத்தில் உச்சநிலையை அடையக்கூடும் என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, அந்த நேரத்தில்தான் வடகிழக்கு பருவமழையும் இருக்கும். மேலும், மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் 3 மாத காலம் தான் அவர்களால் தங்கள் பணிகளை செம்மையாக செய்ய முடியும் என்று கூறி, தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்.

கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து 7 சட்டசபை தொகுதிகளுக்கு இப்போது தேர்தல் வேண்டாம் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நாளை (29-ந்தேதி) கூடி இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்கப்போகிறது. ஏற்கனவே, செப்டம்பர் 4-ந்தேதி தேர்தல் கமிஷன், “இடைத்தேர்தல்கள் பீகார் சட்டசபை தேர்தலையொட்டி நடக்கும்” என்று அறிவித்ததை கருத்தில் எடுத்துக்கொண்டால், நாளை தேர்தல் ஆணையம் வெளியிடப்போகும் இடைத்தேர்தல்களுக்கான அறிவிப்பில், குடியாத்தம், திருவொற்றியூர் சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலை அறிவிக்குமா? அல்லது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நடத்தாமல் இருக்குமா? என்பது தெரிந்துவிடும்.

Next Story