அச்சுறுத்தும் ‘நிவர்’ புயல்!


அச்சுறுத்தும் ‘நிவர்’ புயல்!
x
தினத்தந்தி 23 Nov 2020 8:46 PM GMT (Updated: 23 Nov 2020 8:46 PM GMT)

தமிழ்நாட்டுக்கு 2020-ம் ஆண்டு ஒரு சோதனையான ஆண்டாகும். கடந்த 8 மாதங்களாக கொரோனா பரவலால் எல்லோரும் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது ‘நிவர்’ புயலும் மிரட்டி கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு 2020-ம் ஆண்டு ஒரு சோதனையான ஆண்டாகும். கடந்த 8 மாதங்களாக கொரோனா பரவலால் எல்லோரும் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது ‘நிவர்’ புயலும் மிரட்டி கொண்டிருக்கிறது. இந்த புயலால் மக்கள் வாழ்வில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று ஈரான் நாடு பெயர் சூட்டியிருக்கிறது. ‘நிவர்’ என்ற பெயருக்கு வெளிச்சம் என்று பொருள் வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள சூழ்நிலையில், இந்த ‘நிவர்’ புயல் இருள்சூழ வைத்துவிடக்கூடாது என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தமிழக கடற்கரை அருகே வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுபகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக நேற்று அதிகாலை 2.30 மணியளவில் உருவெடுத்தது. நேற்று காலை 8.30 மணிக்கு தமிழக கடற்கரையில் இருந்து 740 கி.மீ. தூரத்தில் இருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் மாலை 4 மணியளவில் சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ.க்கு வந்துவிட்டது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (புதன்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிதீவிர புயலாக ‘நிவர்’ வலுப்பெறும். இன்றும், நாளையும் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். 11 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1994-ம் ஆண்டு முதல் இதுவரையில் 11 புயல்கள் வந்திருக்கிறது. 1994-ல் பெயரிடப்படாத புயல் 115 கி.மீ. வேகத்திலும், 2005-ம் ஆண்டு ‘பியார்’, ‘பாஸ்’, ‘பனூஸ்’ ஆகிய புயல்களில் மிகப்பெரிய புயலான ‘பனூஸ்’ 101 கி.மீ. வேகத்திலும், 2008-ம் ஆண்டு ‘நிஷா’ புயல் 83 கி.மீ. வேகத்திலும், 2010-ம் ஆண்டு ‘ஜல்’ புயல் 111 கி.மீ. வேகத்திலும், 2011-ம் ஆண்டு ‘தானே’ புயல் 165 கி.மீ. வேகத்திலும், 2012-ம் ஆண்டு ‘நீலம்’ புயல் 83 கி.மீ. வேகத்திலும் வீசியது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘வர்தா’ புயல் 130 கி.மீ. வேகத்திலும், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஒக்கி’ புயல் 185 கி.மீ. வேகத்திலும், 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘கஜா’ புயல் 160 கி.மீ. வேகத்திலும் வீசியது. இந்த புயல்களால் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. ஆனால், ‘நிவர்’ புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘நிவர்’ புயலால் தமிழ்நாட்டிலுள்ள 36 வருவாய் மாவட்டங்களில், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 321 இடங்களும், அதிகப்பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 797 இடங்களும், மிதமான பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 1,096 இடங்களும், குறைவான பாதிப்பு ஏற்படும் இடங்களாக 1,919 பகுதிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் எல்லாம் எவை என்பதை அந்தப்பகுதி மக்களுக்கு அரசு தெரிவிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களாக 4,680 இடங்கள் தயார்நிலையில் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே தங்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கும்நிலையில், கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கடலோர மாவட்டங்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அங்குள்ள மக்கள் தேவையான உணவுப்பொருட்கள், மெழுகுவர்த்தி, மண்எண்ணெய் விளக்குகள், குடிநீர், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வீடுகளில் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். இப்போதைய நிலையில் புயலை எதிர்கொள்ள அரசு எந்திரத்தை முடுக்கிவிடும் பணிகளில் தமிழக வருவாய்த்துறை ஈடுபட்டிருப்பது நிச்சயம் வரவேற்கத்தகுந்தது என்றாலும், புயல் பாதிப்பு தடுப்பு பணிகளில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பொதுமக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற இரட்டை பொறுப்புகளில்தான் இருக்கிறது.

Next Story