பொறுத்தது போதும்; பொங்கி எழுவோம்!


பொறுத்தது போதும்; பொங்கி எழுவோம்!
x
தினத்தந்தி 25 Nov 2020 9:30 PM GMT (Updated: 25 Nov 2020 6:05 PM GMT)

கட்டப்பட்டிருந்த சங்கிலியை தன்பலத்தால் உடைத்தெறிந்து, எதிரிகளை சிவாஜிகணேசன் துவம்சம் செய்வதுபோல் ஒரு காட்சிவரும். அதேபோன்று ஒருநிலைமை இப்போது மத்திய அரசாங்கத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.

1954-ம் ஆண்டு வெளிவந்த “மனோகரா” படத்தில் சங்கிலியால் கட்டுண்டிருக்கும் நடிகர் சிவாஜிகணேசனை பார்த்து, அவரது தாயாராக நடித்த கண்ணாம்பா, “மனோகரா! பொறுத்தது போதும்; பொங்கி எழு!” என்று கூறியவுடன், கட்டப்பட்டிருந்த சங்கிலியை தன்பலத்தால் உடைத்தெறிந்து, எதிரிகளை சிவாஜிகணேசன் துவம்சம் செய்வதுபோல் ஒரு காட்சிவரும். அதேபோன்று ஒருநிலைமை இப்போது மத்திய அரசாங்கத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்க துணிவில்லாத பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, இந்திய எல்லை வழியாக ஊடுருவவைத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களை தினமும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

இன்று 26-ந்தேதி. இதேநாளில் 2008-ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் மூலம் பாகிஸ்தான் நடத்திய வெறியாட்டத்தை யாரும் மறந்திருக்கமுடியாது. அதேபோல ஒரு பயங்கரவாதத்தை ஜம்மு-காஷ்மீரில் இன்று நிகழ்த்த 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள். கடந்தவாரம் வியாழக்கிழமை அவர்கள் ஆப்பிள் பழம் ஏற்றிக்கொண்டுவந்த ஒரு லாரியில் பதுங்கி வந்துகொண்டிருந்தபோது, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோட்டா சுங்கச்சாவடியில் அந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். அதிகாலை 4.50 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்தனர். ஆனால், வீரமிக்க நமது போலீஸ்படையினர், 4 பயங்கரவாதிகளையும் சுட்டுவீழ்த்தி வீரதீர செயல்புரிந்துள்ளனர். அவர்களிடமிருந்து 11 ஏ.கே.47 துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், திசைகாட்டும் கருவி உள்பட குண்டுகள், எறிகுண்டுகள் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்போன்கள், காலணிகள் முதல் மருந்து பொருட்கள் வரை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட எல்லா பொருட்களிலும் பாகிஸ்தான் முத்திரை இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து பிரதமரே ஆய்வு நடத்தியிருக்கிறார். இவர்கள் எந்த வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்தார்கள் என்று விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இந்த சுரங்கப்பாதையை அமைத்து இந்த 4 பயங்கரவாதிகளையும் இந்தியாவுக்குள் அனுப்பியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சாக்புரா சாவடியில் இருந்து 150 மீட்டர் நீளம், 3 அடி அகலத்துக்கு தோண்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, இந்தியாவில் உள்ள சம்பா பகுதியில் வெளியே வரும் வகையில் தோண்டப்பட்டுள்ளது. இந்திய பகுதியில் ரீகல் கிராமத்தில் வெளியே வரும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பயங்கரவாதிகள், உள்ளூர் வழிகாட்டி ஒருவரின் உதவியோடு, 14 கிலோமீட்டர் நடந்து ஜட்வால் என்ற இடத்தில் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையை அடைந்திருக்கிறார்கள். அந்தபக்கம் பாகிஸ்தான் ராணுவச்சாவடியில் இருந்து புறப்பட்டு, இந்தப்பக்கம் இந்திய எல்லைக்குள் நுழையும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் சுரங்கப்பாதை அமைத்து கொடுத்திருக்கிறது. நிச்சயமாக இந்த சுரங்கப்பாதையை பயங்கரவாதிகளால் தோண்டியிருக்க முடியாது. சுரங்கப்பாதையை பார்த்தால் நன்கு திட்டமிட்டு, உரிய கருவிகளுடன் தொழில்நுட்பத்தோடு தோண்டப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது.

இதுமட்டுமல்லாமல், நமது எல்லைப்புறத்தில் கிராமப்பகுதிகளில் ஆளில்லா குட்டி விமானங்களை அனுப்பி பாகிஸ்தான் வேவுபார்த்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே ஒரு மந்திரி, “புல்வாமா தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம்” என்று கொக்கரித்து இருக்கிறார். அந்த சம்பவம் நடந்த சில நாட்களில் சுரங்கப்பாதை அமைத்து பயங்கரவாதிகளை அனுப்பி இருக்கிறார்கள். இந்த 4 பேர்தான் வந்தார்களா?, அதற்குமுன்பு இதுபோல மேலும் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்களா? என்பதையும் இந்திய ராணுவமும், மத்திய உளவுப்பிரிவும் தீவிரமாக புலன்விசாரணை செய்யவேண்டும். 28-ந்தேதி முதல் ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடக்க இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் ஜனநாயகம் மலர்ந்ததை பாகிஸ்தானால் பொறுக்க முடியவில்லை. எனவே, பாகிஸ்தானால்தான் பயங்கரவாதிகள் அனுப்பப்படுகிறார்கள் என்பது சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததில் இருந்தே தெரிகிறது. “இனியும் பொறுக்க வேண்டாம்; பொங்கி எழுவோம்! நமது வீரத்தை காட்டுவோம்” என்பது தான் இந்திய மக்களின் உணர்ச்சிமிக்க குரலாக இருக்கிறது.


Next Story