சுப்ரீம் கோர்ட்டு யோசனை; சூப்பரான யோசனை!


சுப்ரீம் கோர்ட்டு யோசனை; சூப்பரான யோசனை!
x
தினத்தந்தி 20 Dec 2020 9:30 PM GMT (Updated: 20 Dec 2020 6:30 PM GMT)

பஞ்சாப்-அரியானா மாநில விவசாயிகள், தொடர்ந்து 26 நாட்களாக, டெல்லியின் எல்லைப்பகுதியான சிங்கு என்ற இடத்தில் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

மத்திய அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப்-அரியானா மாநில விவசாயிகள், தொடர்ந்து 26 நாட்களாக, டெல்லியின் எல்லைப்பகுதியான சிங்கு என்ற இடத்தில் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இப்போது 3 சாலைகளில் குடும்பங்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தும் விவசாயிகள், இரவில் தாங்கள் வந்த டிராக்டர்களிலேயே தங்கிக்கொள்கிறார்கள். அவர்களது குழந்தைகளும் போராட்டக்களத்தில் இருந்தே ‘ஆன்லைன்’ மூலம் படிக்கிறார்கள். இதுவரையில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தாலும், போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாக இல்லை. முதலில் கொட்டும் மழை, இப்போது கடும் குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்கிறார்கள். டிராக்டர் இல்லாதவர்களுக்காக அங்கேயே 150-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள கிராமமக்கள், கோதுமை, பால், மருந்து, போர்வை, கம்பளி என்று எல்லா பொருட்களையும் கொடுத்து உதவி வருகிறார்கள்.

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு வலுக்கிறது. சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கனிமொழி, சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதேநேரத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட பலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

இப்போதைய சூழ்நிலையில், விவசாயிகளும் தொடர் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மத்திய அரசாங்கமும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவருவதாக தெரியவில்லை. மத்திய வேளாண்துறை மந்திரி தோமர், விவசாயிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “லடாக் பகுதியில் கடும் குளிரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு விவசாயிகளின் இந்த சாலை மறியல் போராட்டத்தால், உணவுப் பொருட்களை அனுப்ப முடியவில்லை. விமானம் மூலம் அனுப்ப வேண்டியநிலை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த பாரதிய கிசான் யூனியன் தலைவர், “ராணுவத்துக்கு உணவுப்பொருட்கள் என்றால் நாங்களே தங்குதடையின்றி செல்ல ஏற்பாடு செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, தமிழ்நாட்டை சேர்ந்த வெ.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், “விவசாயிகள் தங்களின் போராட்டத்தை வன்முறைக்கு சென்றுவிடாத வரையில் போராடுவதற்கு அரசியல் சாசன உரிமை இருக்கிறது. இந்த போராட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது. போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை. ஆனால், தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தாமல் போராடிக் கொண்டிருந்தால், விவசாயிகள் நோக்கம் நிறைவேறாது. எனவே, விவசாயிகள் - மத்திய அரசாங்கம் இருதரப்பு கருத்துகளையும் கேட்டு பரிந்துரை செய்ய, சுயேச்சையான, பாரபட்சமற்ற வேளாண் நிபுணர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்படவேண்டும்” என்று கூறிவிட்டு, இறுதியில் பேச்சு வார்த்தை மீண்டும் தொடர, “இந்த 3 வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைக்கலாமா?” என்று பரிசீலிக்கும்படி மத்திய அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

இதுகுறித்து, மத்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும். “சுப்ரீம் கோர்ட்டு கூறிய யோசனை, சூப்பரான யோசனை” என்ற முறையில், 26 நாட்களாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர அவர்களுடன் மத்திய அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். “அரசாங்கமும் முன்வந்தால், நாங்களும் 2 அடி இறங்கிவரத் தயாராக இருக்கிறோம்” என்று விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறியுள்ளார். எனவே, இந்தப் போராட்டத்துக்கு தீர்வுகாணும் வகையில், உடனடியாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக, சுப்ரீம் கோர்ட்டு கூறியதுபோல, வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைக்க முடியுமா? என்பதை மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்பதே, பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story