தேர்வில் தரமும் வேண்டும்; திறமையானவர்களும் வேண்டும்!


தேர்வில் தரமும் வேண்டும்; திறமையானவர்களும் வேண்டும்!
x
தினத்தந்தி 28 Dec 2020 6:52 PM GMT (Updated: 2020-12-29T00:22:40+05:30)

நீதிமன்றங்களை நீதியின் கோவில்களாகவும், அங்கு நீதி வழங்கும் நீதிபதிகளை நீதியின் கடவுள்களாகவும், சமுதாயம் போற்றுகிறது, புகழ்கிறது.

அந்தவகையில் நீதிபதி பதவிகளில் இருப்பவர்கள், சட்ட அறிவில் மிகுந்த ஞானத்துடன் இருந்தால்தான் பல்வேறு சட்டங்கள், அரசியல் சட்டம் என்ன கூறுகிறது? என்பதை புரிந்து தீர்ப்பு வழங்கமுடியும். இதில் மாவட்ட நீதிபதி பதவி என்பது மிக மிக முக்கியமானது ஆகும். ஏனெனில் நேரடியாக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவிஉயர்வு பெறுவதும், சிலர் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுவதும் உண்டு. எனவே மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மிகுந்த அறிவாற்றல் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதில் சென்னை ஐகோர்ட்டு மிகவும் கவனமாக இருக்கிறது.

இந்த பதவிக்கான தேர்வுகளுக்கு ஐகோர்ட்டு அறிவிக்கை வெளியிடுகிறது. ஐகோர்ட்டு நீதிபதிகள் வினாத்தாள்களை தயாரிக்கிறார்கள். தேர்வை நடத்துவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழு. அதை மேற்பார்வையிடுவதும், வினாத்தாளை திருத்துவதும் நீதிபதிகள்தான். நேர்முகத்தேர்விலும் நீதிபதிகள் இருப்பார்கள். எனவே மாவட்ட நீதிபதிகள் தேர்வை பொறுத்தமட்டில், எந்த ஒரு முறைகேட்டுக்கும், துளிகூட இடம் இல்லாத வகையில் மிக நேர்மையாக நடந்துவருவதை எல்லோரும் அறிவர். மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச வயதுவரம்பு 35 ஆகும். குறைந்தது 7 ஆண்டுகள் வக்கீலாக பணிபுரிந்து இருக்கவேண்டும். இதுதவிர உதவி குற்றவியல் வக்கீல்கள் போன்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று இருக்கிறது.

சிவில் சட்டங்களுக்கு ஒரு தாளும், கிரிமினல் சட்டங்களுக்கு ஒரு தாளும் என இரு தேர்வுகளை கொண்டதாக எழுத்துதேர்வு இருக்கும். இதில் தேறியவர்களுக்கு முதன்மைத்தேர்வு நடக்கும். அதிலும் தேறியவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 562 பேர் கலந்துகொண்ட எழுத்துத்தேர்வான முதல்நிலை தேர்வில் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. இந்த ஆண்டு 32 மாவட்ட நீதிபதிகள் பதவிக்காக நடந்த எழுத்துதேர்வில், 2 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்டனர். அதில் 6 பேர் மட்டும்தான் தேர்வு பெற்றிருக்கிறார்கள். இனி இந்த 6 பேரும் முதன்மை தேர்விலும், நேர்முகத்தேர்விலும் கலந்துகொள்ள வேண்டும். இந்தநிலையில், முதன்மைத்தேர்வில் எத்தனை பேர் தேர்வு பெறுவார்கள்? நேர்முகத்தேர்வில் எத்தனை பேர் தேர்வு பெறுவார்கள்? என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏன் எழுத்துத்தேர்வில் பலர் தேர்வாக முடியவில்லை? என்பதை சட்டநிபுணர்களிடம் கேட்டபோது, தேசிய சட்டப்பல்கலைக்கழகம், சீர்மிகு சட்டப்பல்கலைக்கழகங்கள் போன்ற பல்கலைக்கழகங்களிலும், சட்டக்கல்லூரிகளிலும் படித்து முடித்தவுடன், மிக உயர்மதிப்பெண்களுடன் தேறுபவர்களை, பெரிய பெரிய நிறுவனங்கள் சட்ட அதிகாரிகளாக நிறைய சம்பளத்தில் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன. இதுமட்டுமில்லாமல் நல்ல சட்ட அறிவுபெற்ற வக்கீல்கள் படித்து முடித்து 7 ஆண்டுகளில் தொழிலில் நிறைய சம்பாதிக்க தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் நீதிபதிகள் பதவிக்கு வர தயங்குகிறார்கள். இதையெல்லாம் தாண்டி மாவட்ட நீதிபதி பதவிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலானோர் அந்த தேர்வுகளில் வெற்றிபெற முடியாதநிலை இருக்கிறது. இது ஐகோர்ட்டாலும், சட்ட பல்கலைக்கழகங்களாலும், தமிழக அரசாலும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சட்ட அறிவு மிகுந்தவர்களை மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு ஈர்க்கும் வகையில், இந்த பதவிகளுக்கான சம்பளத்தையும், சலுகைகளையும் அதிகரிக்கவேண்டும். இதுபோன்ற சட்டத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் திறமையுள்ளவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் சட்டக்கல்லூரிகளில் பாடத்திட்டம், கற்பிக்கும் தரம், மாணவர்களின் ஆர்வம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். யாரும் தேர்வில் வெற்றிபெறவில்லையே என்பதற்காக வினாத்தாளை எளிதாக்கிவிடக்கூடாது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. எனவே தேர்வில் நிறையப்பேர் தேர்ச்சி பெறவேண்டும். அதேநேரத்தில் தகுதியும் குறைந்துவிடக்கூடாது என்றவகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பல சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Next Story