வீழ்ந்து கிடந்த பொருளாதாரம் மீண்டெழுந்தது!


வீழ்ந்து கிடந்த பொருளாதாரம் மீண்டெழுந்தது!
x
தினத்தந்தி 6 Jan 2021 12:02 AM GMT (Updated: 6 Jan 2021 12:02 AM GMT)

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பால் வீழ்ந்துகிடந்த இந்திய பொருளாதார நிலை, இப்போது மீண்டெழுந்து பழைய நிலைக்கு வந்துவிட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதற்கான நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பால் வீழ்ந்துகிடந்த இந்திய பொருளாதார நிலை, இப்போது மீண்டெழுந்து பழைய நிலைக்கு வந்துவிட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதற்கான நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. சரக்கு சேவைவரி வசூல் நன்றாக இருந்தால், பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது, நிறையபொருட்கள் விற்பனையாகின்றன, அது உற்பத்தி பெருக்கத்துக்கும் வழிவகுக்கும் என்ற நிலையை ஏற்படுத்தும். அந்தவகையில், சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இதுவரையில் இல்லாத அளவுக்கு வசூல், கடந்த டிசம்பர் மாதம் நடந்திருக்கிறது. இந்த ஒரே மாதத்தில், இந்தியாவில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி வசூலாகி இருக்கிறது. இறக்குமதி வசூலிலும் 27 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பல பொருட்களின் தேவை அதிகரித்திருக்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கான பொருட்கள், மளிகைப்பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்கள், நகை வாங்குதல் போன்ற பல பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அதிக வசூல் நடந்தது, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி ஆகும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் ரூ.32 ஆயிரத்து 172 கோடி தான் வசூலானது. பொதுவாக, மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி சரக்கு சேவை வரி வசூலிக்க வேண்டும் என்றநிலையில், இந்த சாதனை நிச்சயம் மகிழ்ச்சிக்குரியது. இன்னும் 28 சதவீத வரிகளை வாரித்தரும் ஓட்டல், சுற்றுலா தொழில்களில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், இன்னும் வரி வருவாய் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டிலும் மாநில சரக்கு சேவை வரி வசூல் கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ.6 ஆயிரத்து 905 கோடியாக உயர்ந்துள்ளது. ஆக, தமிழகமும் சரிவில் இருந்து எழுந்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் வேகமாக எடுத்து, பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிப்பதில் அனைத்து துறைகளும் விழிப்பாக இருந்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் அனைத்து தொழில்களுக்கும் தளர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. பங்கு சந்தையும் 2010-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால் இப்போது வெற்றிப்பாதையில் செல்கிறது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7,511 புள்ளிகள் என்ற அளவுக்கு மிகப்பெரிய பள்ளத்தில் வீழ்ந்துகிடந்த ‘நிப்டி’, நேற்று மாலை 14,199.50 புள்ளிகளாக உயர்ந்ததும், மார்ச் மாதத்தில் 25 ஆயிரம் புள்ளிகளாக இருந்த ‘சென்செக்ஸ்‘, நேற்று 48,437.78 புள்ளிகளாக உயர்ந்ததும், பங்குசந்தையில் வர்த்தகம் செய்பவர்களுக்கு மிக்கமகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திலும் டிசம்பர் மாதம் ஒரு உச்சநிலையை அடைந்துள்ளது. முதல்முறையாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது. 223 கோடியே 41 லட்சம் பரிமாற்றங்கள் நடந்திருக்கிறது.

மோட்டார் வாகனங்களுக்கு ‘பாஸ்டாக்’ மூலம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்ததில் டிசம்பர் மாதத்தில் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. 13 கோடியே 84 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 303 கோடியே 79 லட்சம் வசூலாகி இருக்கிறது. இன்னும் ‘பாஸ்டாக்’ முறையை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றியபிறகு இந்த வசூல் இன்னும் அதிகமாகும். சிறு வர்த்தகங்களுக்கு கடன் வழங்கும் தொகையும் அதிகமாக உயர்ந்துவருகிறது. எனவே, எல்லா தொழில்களிலும் பச்சைவிளக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், இந்தியா கடந்த ஆண்டு நிலையையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்த ஆண்டு பொருளாதாரத்தில் மிக முன்னேற்றமான நிலையை அடையும் என்ற நம்பிக்கை ஒளி தெரிகிறது. “கொரோனாவை ஒழிப்போம், பொருளாதாரத்தில் தலைநிமிர்வோம்” என்ற இரட்டை முயற்சிகளை ஒரேநேரத்தில் அரசு முன்னெடுக்க வேண்டும்.

Next Story