கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்துவைக்கலாமே!


கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்துவைக்கலாமே!
x
தினத்தந்தி 15 Jan 2021 8:25 PM GMT (Updated: 2021-01-16T01:55:15+05:30)

மழை அதிகமாகப் பெய்யும்போது, ஆற்றுநீரெல்லாம் வெள்ளமென கரைபுரண்டு ஓடி எதற்கும் பயனில்லாமல் கடலில்போய் கலந்துவிடும்.

வறட்சியும், வெள்ளமும் மாறி மாறி தமிழகத்தைத் தாக்கும்நிலையில், வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைப் பார்த்து, இந்த தண்ணீரை எல்லாம் முறையாக சேமித்துவைத்தால், வறட்சிக்கு இடமே இருக்காதே என்ற ஏக்கப்பெருமூச்சு மக்கள் மனதில் தோன்றுவது வாடிக்கையாகிவிட்டது.

மழை அதிகமாகப் பெய்யும்போது, ஆற்றுநீரெல்லாம் வெள்ளமென கரைபுரண்டு ஓடி எதற்கும் பயனில்லாமல் கடலில்போய் கலந்துவிடும். அதே ஆண்டில் கோடையிலும், அடுத்து பருவமழை பொய்த்தாலும், குடிநீருக்குத் தட்டுப்பாடு, விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் பயிர் சாகுபடியில் பாதிப்பு என கடும் வறட்சி ஏற்படும்.

கடலில் வீணாகும் இந்த தண்ணீரை எல்லாம் ஆங்காங்கு கால்வாய்கள் வெட்டி, ஏற்கனவே இருக்கும் குளங்கள், ஏரிகளில் மட்டுமல்லாமல், புதிய நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்களை அமைத்து சேமித்துவைத்தால், தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சமே இருக்காது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில், அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 7 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 1992-ம் ஆண்டுக்குப் பிறகு இப்படியொரு வெள்ளம் இருந்ததில்லை என்கிறவகையில், முதலில் சில நாட்கள் மணிமுத்தாறு, பாபநாசம், கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில், வினாடிக்கு 62 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. வழியெங்கும் பெய்த மழையாலும், சிற்றாறு உள்பட பல காட்டாற்று தண்ணீர் எல்லாம் சேர்ந்தநிலையிலும், வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில்போய் கலந்தது.

ஒரே நேரத்தில் அணைகளை திறந்துவிடாமல், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மேற்கொண்ட முறையான அணை நிர்வாகத்தாலும், காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புத்துறை, பொதுப்பணித்துறை உள்பட அரசின் துறைகள் அனைத்தும் மேற்கொண்ட நல்ல பணிகளாலும் கரையோர மக்களை எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு உரிய நேரத்தில் மீட்டுச்சென்றதால், 1992-ம் ஆண்டு ஏற்பட்டதுபோல உயிர்ச்சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

தாமிரபரணி ஆற்று தண்ணீரை சேமித்துவைக்க, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது ஒரு திட்டத்துக்கு உறுதிமொழி கொடுத்தார். அதன்பின், கருணாநிதி ஆட்சிக்காலத்தில், 2008-ல் ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டத்தின்மூலம் எம்.எல்.தேரியில் ராட்சத குளம் வெட்டி, தண்ணீர் சேமிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசில் ரூ.685 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அடுத்த சில மாதங்களுக்குள் பணிகள் முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சட்டசபையில் 7 முறை இந்த திட்டம் குறித்து பேசியிருக்கிறார்.

இத்திட்டத்தை விரைவில் முடிக்க ராதாபுரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தொடர்ந்த வழக்கு இன்னும் ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இந்த திட்டம் மட்டுமல்லாமல், தாமிரபரணி ஆற்றுக்கரையின் இருபுறமும் உள்ள பகுதிகள் எல்லாம் பலன்பெற மேலும் வாய்ப்புள்ள இடங்களில் பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தாமிரபரணி மட்டுமல்லாமல், காவிரி உள்பட எந்தெந்த ஆற்று தண்ணீரெல்லாம் கடலில்போய் வீணாக கலக்கிறதோ, அதை எல்லாம் சாத்தியக்கூறு உள்ள இடங்களில் சேமித்துவைக்க நத்தை வேகத்தில் இல்லாமல், வெள்ளம் பாயும் வேகத்தில் மேலும் பல திட்டங்களை விரைவாக நிறைவேற்றவேண்டும். நிதிப்பற்றாக்குறை இருந்தால் மத்திய அரசாங்கம் மற்றும் உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவிகளை கேட்டுப்பெற வேண்டும் என்பது வறட்சியால் அடிக்கடி பாதிக்கப்படும் மக்களின் கோரிக்கை குரலாக இருக்கிறது.

Next Story