இளைய சமுதாயத்தின் ஓட்டு யாருக்கு?


இளைய சமுதாயத்தின் ஓட்டு யாருக்கு?
x
தினத்தந்தி 27 Jan 2021 8:04 PM GMT (Updated: 27 Jan 2021 8:04 PM GMT)

பெண்கள், புது வாக்காளர்கள், இளம்வாக்காளர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்களோ? அதுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கப்போகிறது.

ஜனநாயகம் மக்களுக்கு அளித்த பெரிய உரிமை தேர்தல்தான். தங்களை யார் ஆள வேண்டும்? என்பதை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அடிப்படை உரிமை இது. அதனால்தான் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மறைந்த லிண்டன் பி.ஜான்சன், ‘ஓட்டுப்போடும் இந்த உரிமை ஒரு அடிப்படை உரிமை ஆகும். இது இல்லையென்றால் மற்றவையெல்லாம் அர்த்தமற்றவை ஆகிவிடும். இது ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது’ என்றார். நமது தலைவர்கள் இது ஜனநாயக கடமை என்கிறார்கள். ஆக உரிமை என்று எடுத்துக்கொண்டாலும், கடமை என்ற முறையில் எல்லோரும் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை ஆட்சி செய்யப்போகிறவர்களை, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லாமல் தங்கள் தொகுதிகளை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்பவர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள நல்லவாய்ப்பை கொடுப்பதுதான் தேர்தல். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டுக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு கட்சிகள் பல இருந்தாலும், கொள்கைகள் பல இருந்தாலும் மக்கள் அமைதியான முறையில் சென்றுதான் வாக்களிப்பார்களே தவிர, ஒருசில பிறமாநிலங்களை போல பெரியளவில் தேர்தல் வன்முறைகளோ, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவங்களோ தமிழ்நாட்டில் இருக்காது. இதுவரை 15 சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளன. 1952, 1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1967, 1971-ல் தி.மு.க.வும், 1977, 1980, 1984-ல் அ.தி.மு.க.வும், 1989-ல் தி.மு.க.வும், 1991-ல் அ.தி.மு.க.வும், 1996-ல் தி.மு.க.வும், 2001-ல் அ.தி.மு.க.வும், 2006-ல் தி.மு.க.வும், 2011, 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று இருக்கிறது. வருகிற மே மாதத்துக்குள் 16-வது சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் மின்னல் வேகத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை இப்போதே கொடுக்க தொடங்கிவிட்டார். விவசாயக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, 5 பவுனுக்கு குறைவான நகைகளை அடகுவைத்து வாங்கிய கடன்களை ரத்துசெய்வோம் என்றெல்லாம் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவிட்டது. இப்போது வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த வாக்காளர் பட்டியலை பார்த்தால், இந்த தேர்தல் நிச்சயமாக வித்தியாசமான தேர்தலாகத்தான் இருக்கும். எந்தெந்த பிரிவினர் யாருக்கு ஓட்டுப்போட போகிறார்கள்? என்பதற்கு விடை சொல்லப்போகும் தேர்தல். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 2 கோடியே 88 லட்சம் ஆண்களும், 2 கோடியே 93 லட்சம் பெண்களும், 4 ஆயிரத்து 720 மூன்றாம் பாலினத்தவரும் ஓட்டுப்போட்டுள்ள சூழ்நிலையில், இப்போது 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் மொத்த வாக்காளர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 246 ஆக உள்ளது. இதுபோல 18 வயதில் இருந்து 19 வயதுடைய 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 பேரும், 20 வயது முதல் 29 வயதுடைய ஒரு கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து 696 பேரும் இளம் வாக்காளர்கள் என்ற பட்டியலில் வருகின்றனர். மொத்த வாக்காளர்கள் பட்டியலில் 21.86 சதவீதம் இவர்கள் தான்.

மொத்தத்தில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் 44 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்தால், பெண்கள், புது வாக்காளர்கள், இளம்வாக்காளர்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்களோ? அதுதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கப்போகிறது.

Next Story