இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்த்தது 110-வது விதியில் கிடைக்குமா?


இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்த்தது 110-வது விதியில் கிடைக்குமா?
x
தினத்தந்தி 24 Feb 2021 11:30 PM GMT (Updated: 2021-02-25T01:38:02+05:30)

பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் முழுமையான நிதி விவரங்கள், அறிவிப்புகள், வரிகள், வரிச்சலுகைகள் கொண்ட தொகுப்பாக முழு அளவிலான பட்ஜெட் இருக்கும்.

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 11-வது பட்ஜெட் இது. பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் முழுமையான நிதி விவரங்கள், அறிவிப்புகள், வரிகள், வரிச்சலுகைகள் கொண்ட தொகுப்பாக முழு அளவிலான பட்ஜெட் இருக்கும். ஆனால் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், முழு பட்ஜெட்டை அரசால் தாக்கல் செய்ய முடியாது. 3 மாதங்களுக்கு ஒவ்வொரு துறைக்கும் செலவுக்காக ஆகும் நிதியை மட்டும்தான் ஒதுக்கீடு செய்யமுடியும்.

இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை சார்ந்த எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படாது என்பது மரபு. ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் நடந்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியில் பா.ஜ.க. அரசாங்கம் தாக்கல் செய்த இடைக்கால மத்திய பட்ஜெட்டில் ‘பி.எம். கிசான்’ என்ற விவசாயிகள் நிதி உதவித்திட்டம் அதாவது 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னுதாரணம் இருப்பதால், தமிழக இடைக்கால பட்ஜெட்டிலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகள் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம், கோவை மெட்ரோ ரெயில் திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள55 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்கு குடும்ப தலைவரின் இயற்கையான மரணம், விபத்து மரணம், நிரந்தர இயலாமை ஆகியவற்றிற்கான காப்பீட்டு திட்டம், அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பஸ்கள் போக்குவரத்து கழகங்களுக்காக வாங்கப்படும், அதில் 2 ஆயிரம் பஸ்கள், மின்சார பஸ்களாக இருக்கும் என்பது போன்ற சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கடந்த 5-ந்தேதி சட்டசபையில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கடன் நிலுவைத்தொகையான ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் அதற்கு ரூ.5 ஆயிரம் கோடிதான் ஒதுக்கியது எல்லோருக்கும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர்ச.கிருஷ்ணன், ‘இந்த தொகையை 5 ஆண்டுகாலத்தில் சரிசெய்தால் போதும்’ என்று விளக்கம் கூறியிருக்கிறார். ஆக இந்த அறிவிப்புக்கான செலவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அரசாங்கமும் தாங்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அரசின் கடன் 2011-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 1,439 கோடி இருந்த நிலையில், தற்போது வரும் மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் வருவாய் குறைந்த நேரத்தில் கூடுதலாக கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கங்கள் கடன் வாங்குவது தவறில்லை. வளர்ச்சி திட்டங்களுக்காகவும், உள்கட்டமைப்புகளை பெருக்குவதற்காகவும், மேம்பாட்டு திட்டங்களுக்காகவும், மூலதன திட்டங்களுக்காகவும் கடன் வாங்கினால் நிச்சயமாக பயனளிக்கும். ஆனால் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டிக்காகவோ, மானியங்களுக்காகவோ செலவழிப் பதற்காக வாங்கினால் பயன்தராது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள், குறிப்பாக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் அறிவிப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் சட்டசபை கூட்டத்தில், 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யும் அறிக்கைகளில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Next Story