போர்! இது 2-வது அலைக்கு எதிரான போர்!


போர்! இது 2-வது அலைக்கு எதிரான போர்!
x
தினத்தந்தி 13 April 2021 8:07 PM GMT (Updated: 14 April 2021 12:17 AM GMT)

அமரர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், தினத்தந்தியின் தலைப்பு செய்திகளில் எப்போதுமே துடிப்பு இருக்கவேண்டும் என்பதில், அதிக முனைப்பாக இருப்பார். பாகிஸ்தான் போரின்போது, “போர்.. இது போர்...” என்று எட்டுக்காலம் செய்திக்கு தலைப்பிட்டார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோலத்தான் இப்போது பிரதமர் நரேந்திரமோடி, “கொரோனாவுக்கு எதிரான 2-வது பெரிய போரின் தொடக்கம்தான் தடுப்பூசி திருவிழா” என்று கூறியதை கருத்தில் கொண்டால், “போர்.. இது கொரோனாவின் 2-வது அலைக்கு எதிரான போர்..” என்று ஒரு உறுதியான முழக்கத்தை இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழக மக்கள் பிரகடனப்படுத்த வேண்டிய தருணம் இது.

கொரோனா தலையெடுத்து ஓராண்டுக்கு மேலான சூழ்நிலையில், “பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது. இனி ஓடிவிடும்” என்று நினைத்த நேரத்தில், அந்த கொடூர அரக்கனால் மீண்டும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முதல் அலையைவிட 2-வது அலை மிக கொடூரமாக இருக்கிறது. கொரோனா வராமல் தடுப்பதற்கு  நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில், “19-ம் நூற்றாண்டில் சாதிகளுக்கு எதிராக வாழ்ந்த, சமுதாய சீர்திருத்தத் தலைவர் மகாத்மா ஜோதிபா புலே பிறந்த நாளாம் ஏப்ரல் 11-ந்தேதி முதல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான 14-ந்தேதி (இன்று) வரை, நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்படும். இந்த 4 நாட்களிலும் தடுப்பூசி போடுவதற்கு ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை அடைய பாடுபட வேண்டும். மக்களை பொறுத்தமட்டில், தனி நபர் தூய்மையும், சமூகத் தூய்மையும் மிகமிக அவசியம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு, முதியோர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள், போன்றோரை தடுப்பூசி போடவைக்கும் வகையில், ஒவ்வொருவரும் ஒருவருக்கு தடுப்பூசி போட உதவவேண்டும். இதுபோல, சிகிச்சை பெறுவதற்கான வசதிகளோ, அதுபற்றி புரிதலோ இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொருவரும், ஒருவருக்கு சிகிச்சை அளிக்க உதவவேண்டும். மூன்றாவதாக ஒவ்வொருவரும் ஒருவரை காப்பாற்ற வேண்டும். இதன் பொருள் எல்லோருமே தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், மற்றவர்களை காப்பாற்றவும் கண்டிப்பாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அடுத்து சமுதாயமும், மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட வேண்டும். யாராவது ஒருவருக்கு கொரோனா இருந்தாலும், அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். நமது வெற்றியே சிறிய அளவிலான கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்கிக் கொள்வதிலும், தேவையின்றி வீட்டுக்கு வெளியே செல்வதை நிறுத்திக்கொள்வதிலும், தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சோப்புபோட்டு கழுவுதல் ஆகியவற்றை கடைபிடிப்பதில்தான் இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் அனைவரும் கடைபிடித்து விட்டால், இந்த போரில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2-வது அலைக்கான போரில் விரைவில் வெற்றிகாணவேண்டும் என்றால், இந்த கொரோனா திருவிழா 4 நாட்களோடு முடிந்துவிடக்கூடாது. இன்னும் பல நாட்கள் நீட்டிக்கப்பட்டு அரசாலும், மக்களாலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட வேண்டும். 1940-ம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனி நாட்டு மக்களை போரின்போது உற்சாகப்படுத்துவதற்காக, “இன்று தொடங்கும் இந்தப் போர்தான், அடுத்த 1000 ஆண்டுக்கான ஜெர்மனி நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும்” என்றார். அதுபோல, கொரோனாவின் 2-வது அலைக்‌கு எதிரான இந்த போரின் இப்போதைய தொடக்கம்தான் அடுத்த பல ஆண்டுகளுக்கு தமிழகத்தின் தலைவிதியை, வளர்ச்சியை, முன்னேற்றத்தை நிர்ணயிக்கும். எனவே, அரசின் நடவடிக்கைகளும் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசிகள் போடப்படுவது, பரிசோதனைகள் அதிகரிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களையும் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதில் தயவுதாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Next Story