தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டும் தமிழ்நாடு!


தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டும் தமிழ்நாடு!
x
தினத்தந்தி 15 April 2021 10:00 PM GMT (Updated: 15 April 2021 7:01 PM GMT)

பண்டைய இதிகாச நூல்களில் கூறப்படும் பல கருத்துகள், இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளது.

மகாபாரதத்தில், கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்திர போரில், அர்ஜூனன் எதிரணியில் இருந்தவர்களைப்பார்த்து போரிடத் தயங்கும்போது, கிருஷ்ண பகவான் அர்ஜூனனை நோக்கி, “அர்ஜூனா... தளராதே. எழுந்து நில். இது உனக்கு தகாது. உன் மனத்தளர்ச்சியை உதறி எறிந்துவிட்டு இந்தப்போரை எதிர்கொள்” என்று கூறியவுடன், அர்ஜூனன் வீறுகொண்டு எழுந்து போராடினார் என்று கூறப்படுகிறது.

அதுபோன்ற உற்சாகத்தை, தமிழக பொது சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பூசிபோடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அளித்தது நல்ல பலனை கொடுக்க தொடங்கியுள்ளது. “இப்போது கொரோனா பரவல் மிக அதிகமாகிவிட்டது. இந்தப்போரில் வெல்வதற்கு ஊரடங்கு தேவையில்லை. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தினாலே போதும். 45 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி போடப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

தமிழக அரசும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது. பல மாநிலங்களில் இப்போது தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கிறது. மத்திய அரசாங்கத்தை பொறுத்தமட்டில், ஒரு மாநிலத்தில் போடப்படும் தடுப்பூசிகளின் 3 நாள் முதல் 5 நாள் வரை சராசரியை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் தடுப்பூசி மருந்துகளை அனுப்புகிறது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி 15,168 பேரும், 6-ந்தேதி 21,067 பேரும் மட்டுமே தடுப்பூசி போட்ட நிலையில், எங்கே தடுப்பூசி சப்ளை குறைந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், 7-ந்தேதி 3 மடங்கு உயர்ந்து 65,764 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துவிட்டது. “அடுத்த சில நாட்களில், நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடுவதுதான் எங்கள் இலக்கு” என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவித்திருப்பது, ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகை பட்டியல், அனைத்து நகரங்களுக்கும், மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதிக்குள் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று அவர், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. இதுவரை 54 லட்சத்திற்கும் மேல் டோஸ்கள் வந்திருக்கிறது. மேலும், 2 லட்சம் டோஸ்கள் எந்தநேரத்திலும் வந்துவிடும். தற்போதைய கணக்குப்படி, 9 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஏறத்தாழ 44 லட்சம் பேர் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏறத்தாழ 2 கோடியே 25 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு தயாராக இருக்கிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

2 கோடியே 25 லட்சம் மக்களுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டால், பரவலை நிச்சயமாக குறைக்க முடியும். இதில் தொய்வு ஏற்பட்டால், நமக்கு வரவேண்டிய தடுப்பூசியின் அளவும் குறைந்துவிடும். மத்திய அரசாங்கமும் வயதுவரம்பை விதிக்காமல், எல்லோருக் கும் தடுப்பூசி என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். தடுப்பூசி மருந்து உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகளில், 6 கோடியே 45 லட்சம் டோஸ்கள் 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இதில், 25 நாடுகளுக்கு 3 கோடியே 58 லட்சம் டோஸ்கள் வர்த்தக ரீதியிலானவை. 1 கோடியே 4 லட்சம் டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது. “தனக்கு மிஞ்சித்தான் தான தர்மம்” என்பார்கள். அந்தவகையில், முதலில் வயது வரம்பில்லாமல், இந்தியாவில் எல்லோருக்கும் எவ்வளவு விரைவில் தடுப்பூசி போட முடியுமோ, அவ்வளவு விரைவாக தடுப்பூசியைபோட்டு, விரைவில் கொரோனாவுக்கு “டாட்டா” காட்டிவிடவேண்டும்.

Next Story