சென்றிடுவீர் எட்டுத்திக்கும்...


சென்றிடுவீர் எட்டுத்திக்கும்...
x
தினத்தந்தி 21 April 2021 7:39 PM GMT (Updated: 21 April 2021 7:39 PM GMT)

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாடினார் பாரதியார் அன்று.

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாடினார் பாரதியார் அன்று. இப்போதைய நிலையில் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் தடுப்பூசி மருந்துகள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று மத்திய அரசாங்கத்தையும், மாநில அரசாங்கத்தையும் மக்கள் கேட்கும் அவசியநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி மருந்துதான் சாலச்சிறந்தது என்ற வகையில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, இவர்களில் நாட்டிலுள்ள மொத்த மக்கள்தொகையில் 8 சதவீதம் பேருக்குதான் ஒரு டோசும், ஒரு சதவீதம் பேருக்குதான் இரு டோசும் போட்டு முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், நேற்றுமுன்தினம் வரை 48 லட்சத்து 68 ஆயிரத்து 105 பேருக்குதான் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 2 கோடியே 20 லட்சம். இந்தநிலையில் வருகிற மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனுமதியை மத்தியஅரசாங்கம் அளித்துள்ளது. அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல் வாக்காளர் பட்டியல்படி, 91 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரத்து 734 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு, தேவையான மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. தற்போது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான டோஸ்களைத்தான் மாதந்தோறும் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் ஜூலை முதல்10 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள ‘பாரத்டெக்’ நிறுவனம் மாதத்துக்கு ஒரு கோடி கோவேக்சின் மருந்துகளை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் பெங்களூருவிலும் ஒரு தொழிற்சாலையை நிறுவிவருகிறது. 2 அல்லது 3 மாதங்களில் அங்கும் உற்பத்தியை தொடங்கி, மாதம் 6 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்வதாக கூறியுள்ளது.

இதுதவிர ரஷியநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக் நிறுவனத்துக்கும் மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், ‘பயோலாஜிக்கல்- இ’ என்ற மேலும் ஒரு தடுப்பூசி ஆகஸ்டு மாதத்துக்குள், மாதம் 7 கோடி டோஸ்கள் உற்பத்தியை தொடங்கவிருக்கிறது. தற்போது மத்திய அரசாங்கம் கோவிஷீல்டு தயாரிக்கும் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், கோவேக்சின் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ரூ.1,567 கோடியும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து உற்பத்தியை பெருக்க சொல்லியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு இது நிச்சயம் போதாது. வெளிநாடுகளிலிருந்து ஸ்புட்னிக், ஜான்சன் அண்டு ஜான்சன், மாடர்னா, பைசர் போன்ற பல மருந்துகளையும் இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இந்த மருந்துகளெல்லாம், அந்தந்த நாடுகளில் ஏற்கனவே 3 கட்ட பரிசோதனைகளை முடித்துள்ளநிலையில், இந்தியாவில் பழையபடி 3 கட்ட பரிசோதனைகள் நடத்தாமல், அவசரகால பயன்பாட்டுக்காக, அடிப்படை பரிசோதனைகளை மட்டும் முடித்து அனுமதி வழங்க வேண்டும். இந்திய மருந்துகளைவிட இவற்றின் விலை அதிகம். இதன் விலையை குறைக்கும்வகையில், தற்போது விதிக்கப்படும் 10 சதவீத சுங்கவரியை குறைப்பது குறித்து அரசு நடத்தும் பரிசீலனையை விரைவில் முடித்து அதனை ரத்து செய்ய வேண்டும்.

இந்த தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முன்வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் விரைவில் அனுமதி வழங்க வேண்டும். இந்தப்பணியில் செங்கல்பட்டிலுள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் மற்றும் 4 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களையும் உடனடியாக பயன்படுத்த வேண்டும். அங்கு உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் இருக்கின்றன என்று ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதையும் மத்திய அரசாங்கம் பரிசீலிக்க, தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும். மொத்தத்தில் தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் ஏராளமாக உற்பத்தி செய்ய வேண்டும். வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதை மக்களுக்கு பயன்படுத்துவதற்கு உரிய மையங்களும் ஏராளமாக தொடங்கப்பட வேண்டும். 

Next Story