தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு இந்த சப்ளை போதாது


தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு இந்த சப்ளை போதாது
x
தினத்தந்தி 11 Jun 2021 9:38 PM GMT (Updated: 2021-06-12T03:08:44+05:30)

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எங்கே நமக்கு கொரோனா வந்துவிடுமோ... வந்துவிடுமோ... என்று எல்லோரையும் அச்சத்துடன் வாழவைத்து கொண்டிருக்கும், கொடிய கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் தடுப்பூசி மருந்துதான் சரியான ஆயுதம் என்பது உலகம் முழுவதுமே ஏற்றுக் கொண்ட உண்மை ஆகும்.

‘’தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிடவேண்டும் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்து தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மிக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டுக்கு உள்ளேயே சென்று நோயாளிகளை நலம் விசாரித்தது எல்லோராலும் மிகவும் பாராட்டப்படுகிறது. ஒரு பக்கம் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கி அனுப்ப தேவையான மருத்துவ உதவிகளை அளித்து கொண்டிருக்கும் தமிழக அரசு, மறுபக்கம் கொரோனா தடுப்பூசி போடுவதிலும் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக தற்போது ஒரு நாளைக்கு 8 முதல் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் அளவுக்கு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கான மருத்துவ பணியாளர்களும் தயார்நிலையில் இருக்கிறார்கள். பொதுமக்களும் ஆரம்பத்தில் தடுப்பூசிபோட காட்டி வந்த தயக்கத்தை எல்லாம் விட்டுவிட்டு தடுப்பூசி போடும் இடங்களில் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள்” என்று கூறுகிறார், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஆனால் தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசி சப்ளையில் மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு, தமிழக அரசின் வேகத்துக்கு ஈடு கொடுப்பது போல் இல்லை. ஒரு கோடியே 6 லட்சத்து 13 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்தான் வந்திருக்கின்றன. கடந்த மாதம் 27-ந்தேதி ஒரேநாளில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 915 பேருக்கு தடுப்பூசி போட்ட தமிழ்நாட்டில், நேற்றுமுன்தினம் கையிருப்பில் தடுப்பூசி இல்லாததால் 2,327 பேருக்கு மட்டுமே போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக வந்த மக்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற தகவலை கேட்டு ஏமாற்றத்துடன் வீடுதிரும்பினர்.

தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கணக்குபடி, 97 லட்சத்து 65 ஆயிரத்து 284 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடவேண்டும். 
அப்படியானால், 12 கோடியே 57 லட்சத்து 39 ஆயிரத்து 910 டோஸ் தடுப்பூசிகள் தேவை என்ற நிலை இருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கம் சப்ளை செய்யும் தடுப்பூசி டோஸ்களின் கணக்கை எடுத்துக் கொண்டால், யானை பசிக்கு 
சோளப்பொறி போட்டது போல் உள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்காக மாநிலங்களுக்கு சப்ளை செய்வதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தை மத்திய அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது. அதே நோக்கத்தை தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டும் என்றால், இப்போது சப்ளை செய்யும் தடுப்பூசி டோஸ்களை விட பல மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், ‘குறைந்தபட்சம் மாதத்துக்கு 2 கோடி டோஸ்களாவது வழங்கினால் தான், 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும்’ என்று கூறியுள்ளார். மத்திய அரசாங்கம் இந்த யதார்த்த நிலையை புரிந்து கொண்டு உடனடியாக தமிழக மக்கள் தொகை, தடுப்பூசி போடுவதற்காக இருக்கும் கட்டமைப்பு, மக்களுக்கு உள்ள ஆர்வம் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இப்போது தருவதைவிட பல மடங்கு தடுப்பூசி மருந்தை சப்ளை செய்யவேண்டும் என்பதே தடுப்பூசிக்காக காத்து கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story