மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதா?


மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதா?
x
தினத்தந்தி 26 July 2021 10:12 PM GMT (Updated: 2021-07-27T03:45:01+05:30)

உலகில் ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்கிவருகிறது. அரசியல் சட்டத்தை வகுத்துத்தந்த ஆன்றோர்கள் இதையொரு கூட்டாட்சி நாடாகவே தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மாநிலங்களுக்கு தனியாக, மத்திய அரசுக்கு தனியாக என உரிமைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தத்துவத்தைத்தான் மறைந்த கலைஞர் கருணாநிதி, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்று பறைசாற்றினார்.

ஆனால், சமீப காலங்களாக இந்தியா முழுமைக்கும் “ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு; ஒரே வரி, ஒரே நாடு; ஒரே நுழைவுத்தேர்வு” என்று, கால்தடம் பதித்துவரும் மத்திய அரசாங்கம், இப்போது மாநில அரசின் சில உரிமைகளில் கைவைக்க முயற்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், இந்திய கடல்சார் மீன்வள மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. “மீன்பிடி படகுகளுக்கு லைசென்ஸ், கட்டணம் என்று பல பிரிவுகளைக் கொண்ட இந்த மசோதா, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். 7-வது அட்டவணையின் மாநில பட்டியலின்கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளை கொண்டுள்ளது” என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மீன்வளம் என்பது மாநில பட்டியலில் இருக்கும்போது, அந்த உரிமைக்குள் மத்திய அரசு நுழையலாமா? என்பது எல்லோருடைய கேள்வி.

இதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் சுரங்கங்கள், கனிம வளங்களை பொறுத்தமட்டில், மாவட்ட கனிம கட்டமைப்பு அறக்கட்டளை என்று ஒரு நிதி இருக்கிறது. இதன்படி, அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகையில், 12-1-2015-ந் தேதிக்கு முன்பாக குத்தகை உரிமம் பெற்ற சுரங்க குத்தகைதாரர்கள் 30 சதவீதமும், அதற்குப்பின் உரிமம் பெற்ற சுரங்க குத்தகைதாரர்கள் 10 சதவீதமும் மாவட்ட கனிம கட்டமைப்பு அறக்கட்டளைக்கு செலுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டமும் இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையில், 60 சதவீதம் அல்லது அதற்கு மேலான தொகை குடிநீர் வழங்குதல், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், திறன்மேம்பாடு, உள்கட்டமைப்பு, துப்புரவு பணிகள், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காகவும், மீதமுள்ள 40 சதவீத தொகை நீர்பாசன மேம்பாடு, எரிசக்தி மற்றும் நீர்வடிப்பகுதி மேம்பாடு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது மத்திய அரசாங்கம் இந்த மாவட்ட கனிம கட்டமைப்பு அறக்கட்டளை நிதி முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இது நிச்சயமாக மாநில அரசுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை என்று தனியாக ஒரு நிதி இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இப்போது திடீரென கூட்டுறவுத்துறையிலும் கைவைக்க மத்திய அரசு முயற்சி எடுக்கிறது. கூட்டுறவு என்பது மாநில பட்டியலில் இருக்கிறது. அதை மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டுவரும் வகையில், அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசாங்கம் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இது நிறைவேற்றப்பட்டால், கூட்டுறவு சங்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். கூட்டுறவு சங்கங்கள் என்பது, அந்தந்த ஊரில் உள்ள உறுப்பினர்களைக்கொண்டு, அங்கேயே அமைக்கப்படும் சங்கங்கள் ஆகும். இது மாநில அரசுப்பட்டியலில் இருந்தால்தான் மக்களுக்கும் பயனளிக்கும், மாநில அரசும் நேரடியாக கண்காணிக்க முடியும்.

கூட்டுறவு சங்கத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே தமிழ்நாடுதான். 1904-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் திரூரில் முதல் வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், கூட்டுறவு துறையை மாநில பட்டியலில் இருந்து எடுப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. மொத்தத்தில் மத்திய அரசாங்கம் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில், மாநில அரசுகளுக்கு கூடுதலாக அதிகாரம்வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், உள்ளதையும் பறிப்பது சரியான செயலாக இருக்காது என்பதுதான் தமிழகத்தின் கருத்து.

Next Story